Friday, August 9, 2013

ரிஸ்வி முப்தியின் உரைக்கு – கிண்ணியா ஜம்மியத்துல் உலமாவின் பூரண விளக்கம்

ஷவ்வால் தலைப்பிறை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவரின் அறிக்கைக்கான கிண்ணியா உலமா சபையின் விளக்கம்.
கிண்ணியாவில் ஷவ்வால் தலைப்பிறை கண்டு நோன்புப் பெருநாளை 08.08.2013 வியாழன் அன்று கொண்டாடியது தொடர்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தேசியத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள், அதே தினம் பிற்பகல் 01.08 மணிக்கு ஆற்றிய உரையில் காணப்படும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் தொடர்பாக கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, தஃவா அமைப்புக்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் 08.08.2013 (வியாழன்) பி.ப 04.00 மணி அளவில் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையில் கூடி இது தொடர்பாக கலந்துரையாடியதன் மூலம் எடுக்கப்பட்ட விடயங்களை பொதுமக்களுக்கு கீழ்வருமாறு தெளிவுபடுத்த விரும்புகின்றது.
1. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை 07.08.2013 (புதன் மாலை) நாட்டின் பல்வேறு பாகங்களிலும் பிறை பார்க்கும்படி பொதுமக்களை வேண்டியதுடன், அதுகுறித்த தகவல்களை தெரிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்களை ஊடகங்கள் வாயிலாகவும், குறுந்தகவல்கள் மூலமாகவும் குறிப்பிட்டிருந்தது. மேலும், மேமன் சமுகத்தைச் சேர்ந்த பிறைக்குழுவையும் கிண்ணியா போன்ற முஸ்லிம் பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில் கிண்ணியாவில் ஷவ்வால் மாத்திற்கான தலைப்பிறை தென்பட்டதை அறிவித்ததைத் தொடர்ந்து வானசாஸ்திர திணைக்களத்தின் கருத்தின்படி 07.08.2013 புதனன்று பிறை தென்பட சாத்தியமில்லை எனக் கூறியுள்ளமை ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்தாக அமைந்துள்ளது. ஷவ்வால் தலைப்பிறை பார்hக்கும்படி மாநாட்டைக் கூட்டியவர்களே, அதே தினத்தில் பிறை தென்படாது என்று மறுத்துரைப்பது ஒன்றுக்கொன்று நேர் மாறான கருத்தாகக் காணப்படுகின்றது.

2. கிண்ணியாவில் நோன்புப் பொருநாள் கொண்டாடுவதென கிண்ணியா உலமா சபை எடுத்த தீர்மானத்தில் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் ஒப்பமிடவில்லை எனவும், போலியான ஒப்பமிடப்பட்டுள்ளது எனவும் றிஸ்வி முப்தி அவர்கள் தனது விளக்கவுரையின் போது குறிப்பிட்டார். உண்மையில், குறித்த அக்கடிதத்தில் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம். ஹிதாயத்துள்ளாஹ் (நளீமி) அவர்களே கையொப்பமிட்டிருந்தார். இவர், முன்னாள் தலைவராகவிருந்த மௌலவி ஏ.ஆர். நஸார் (பலாஹி) அவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றதன் பின்னர், அவருக்குப் பதிலாக 2013 பெப்ரவரியிலிருந்து நஸார் மௌலவியின் உடன்பாட்டுடனேயே தலைவராக நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது உறுப்பினர்களின் ஏகோபித்த முடிவுக்கிணங்கவே நியமிக்கப்பட்டமை கவனிக்கத்தக்கது. இது கிண்ணியா மக்கள் நன்கறிந்த விடயமாகும். இந்நிலையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் இவ்விடயத்தை அறியாதிருக்கிறார் என்பது ஆச்சரியமே.

3. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் கொழும்பிலிருந்து அனுப்பப்பட்ட குழு, கிண்ணியாவில் பிறை கண்ட மஸ்ஜிதுல் அஸ்ஹர் பேஷ் இமாம் றியாஸ் மௌலவி அவர்களிடமிருந்து இது குறித்து விசாரிக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. எனினும், அவர் அக்குழுவினரின் வாகனத்திலேயே நீண்ட நேரமாக இருந்துள்ளார். ஆனால், குறித்த பிரதேசத்தில் பிறை கண்ட இன்னும் சிலரை விசாரித்த (மேமன் சமூகத்தைச் சேர்;ந்த) அக்குழுவினர் தமிழ் மொழியில் விசாரித்தபோதும், அதனை கொழும்புக்கு அறிவிக்கும்போது மேமன் மொழியிலேயே பேசியுள்ளனர். இது, கருத்துக்களை முன்வைத்த மக்களுக்கு, அவர்கள் என்ன கருத்தை கொழும்புக்கு எத்தி வைக்கிறார்கள் என்பதைப் புரிய முடியாது செய்துவிட்டது.

4. கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவர் ஏ.ஆர். நஸார் மௌலவி அவர்கள் தனது உயர் கல்விக்காக வெளிநாடு சென்றிருந்தார் என்று குறிப்பிட்டிருந்தோம். அவர் அவ்வாறு சென்றதிலிருந்து இன்றுவரைக்கும் அவர் தலைமைப் பொறுப்பை மீளப் பொறுப்பேற்கவில்லை என்பதும் இங்கு ஊன்றி கவனிக்கத்தக்கது. அதன் காரணமாகவே தற்போதைய தலைவர் ஏ.எம். ஹிதாயதுள்ளாஹ் (நளீமி) அவர்களும், தற்போதைய செயலாளர் எம்.எஸ்.எம். ஷபாஅத் (மதனி) அவர்களும் கையொப்பமிட்டிருந்தனர். நிலைமை இவ்வாறிருக்க, இதுகுறித்த மேலதிக விளக்கங்கள் எதனையும் பெறாது அ.இ.ஜ. உலமா தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூலம் நாட்டு முஸ்லிம் மக்களுக்கு விடுத்த பிறை தொடர்பான விளக்கத்தில் குறிப்பிட்ட கருத்துக்கள் கிண்ணியா உலமா சபையின் தலைவரையும் செயலாளரையும், கிண்ணியா மக்களையும் கவலையடையச் செய்வதாகவும் அவமதிப்பதாகவும் அமைந்துள்ளது.

5. ஷவ்வால் பிறை தொடர்பான அ.இ.ஜ. உலமாவின் தீர்மானத்தின் பின் கிண்ணியா ஜமஇய்யதுல் உலமா எடுத்த ஏகோபித்த தீர்மானத்தை விமர்சிக்கும்போது அ.இ.ஜ.உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் கடந்த சுனாமியின்போது கிண்ணியா, மூதூர் மக்களுக்கு, தான் செய்த உதவியைச் சொல்லிக் காட்டினார். உலமா சபையின் தேசியத் தலைவர் ஒருவர் தனது சொந்த மக்களுக்கு ஒரு கஷ்ட நிலையின்போது செய்த ஒரு மனிதாபிமான உதவியை சொல்லிக்காட்டுவது எவ்விதத்தில் நியாயமாகப்படுகிறது? இலங்கை முஸ்லிம்களால் கண்ணியமாக மதிக்கப்படுகின்ற தேசியத் தலைவர் ஒருவரிடமிருந்து இத்தகைய கருத்தை எமது மக்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இது மனவருத்தத்திற்குரியது.

6. 08.08.2013 (வியாழக்கிழமை) அன்றைய தினம் கிண்ணியா மக்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடியது தொடர்பாக தனது பத்வாவை வெளியிடும்போது, இன்று நோன்பை விட்டவர்கள் அதனை இன்னுமொரு தினத்தில் கழா செய்ய வேண்டுமென்றும், இன்று நோன்பு நோற்றவர்கள் நன்மாராயம் பெற்றவர்கள்என்றும் குறிப்பிட்டிருந்தார். தமது சொந்த மண்ணில் பிறை கண்ட மக்கள் பெருநாளைக் கொண்டாடுவது எவ்விதத்தில் தவறாகும். எந்த அளவுகோலை வைத்து குறித்த பத்வாவை அவர் அம்மக்களுக்கு முன்வைத்தார்? இரண்டாம் நபர்களின் கருத்துக்களை மட்டும் வைத்து இவருக்கு பத்வாவை வழங்க முடியுமானால், பிறையை கண்ணால் கண்டவர்கள் இஜ்திஹாத் அடிப்படையில் தீர்மானம் எடுத்து, பெருநாளைக் கொண்டாடியது எவ்விதத்;தில் தவறாகும். இந்நிலையில், அவர் இலங்கைவாழ் முஸ்லிம்கள் மத்தியில் முன்வைத்த பத்வாவுக்கு என்ன பெறுமானம் இருக்கிறது? இதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

7. கிண்ணியாவில் பிறை தொடர்பாக யாரும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என தேசியத் தலைவர் குறிப்பிட்டிருந்தார். இக்கருத்து கண்டிக்கத்தக்கது. ஏனெனில், கிண்ணியாவில் பிறை கண்டது தொடர்பாக கிண்ணியா ஜம்இய்யதுல் உலமாவின் பிறைக் கமிட்டியின் பொறுப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எஸ். ஜாபிர் (நளீமி) அவர்கள் உரிய முறையில், உரிய நேரத்தில் அ.இ.ஜ. உலமாவிடம் தகவல்களை வழங்கியுள்ளார். (இவர் கிண்ணியா ஜாவாப் பள்ளிவாயலின் தலைவராகவும், பாடசாலை ஆசிரியராகவும் கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது). இந்நிலையில், கிண்ணியாவில் இருந்து தமக்கு உத்தியோகபூர்வமாக தகவல் சொல்லப்படவில்லை என்பது உண்மைக்குப் புறம்பான கருத்தாகும். இவ்விடயம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கருத்தை கேள்வியுற்ற கிண்ணியா உலமா சபை இரவு 09:00 மணியளவில் தஃவா அமைப்பின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பிறை கண்டவர்கள், அரசியல்வாதிகள் என பலருடன் ஒன்றுகூடி, பிறை கண்டதை மீண்டும் ஊர்ஜிதம் செய்து எடுத்த கருத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் இரவு 09:30 மணியின் பின்னர் மீள அறிவித்தபோது, பிறை தொடர்பாக தீர்மானம் எடுக்க ஒன்றுகூடிய உலமா சபையினர் கலைந்து சென்றுவிட்டதாக அங்கிருந்து பொறுப்பற்ற பதிலை அளித்துள்ளனர். இதன் பின்னரே, கிண்ணியாவில் பெருநாள் கொண்டாடுவதென கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபை ஏகமனதாகத் தீர்மானமெடுத்து பொதுமக்களுக்கு அறிவித்தது.

8. அ.இ.ஜ. உலமாவினால் கிண்ணியாவுக்கு அனுப்பப்பட்ட மேமன் சமூகத்தவர்கள் இருவரும் சொன்ன கருத்துக்கள் நம்பக்கூடியதாக இருந்ததாகக் குறிப்பிடும் தேசியத் தலைவர், கிண்ணியாவில் பிறை கண்ட அத்தனை பேரினதும் கருத்துக்களைப் புறக்கணிப்பது எந்த விதத்தில் நியாயமானது? தமது கண்களால் பிறை கண்டவர்களின் உண்மைக் கருத்துக்களை மறுதலித்து, விசாரிக்க வந்தவர்களின் கருத்தை மட்டும் முழுமையாக ஏற்றுக் கொள்வதிலுள்ள உள்நோக்கம்தான் என்ன???

9. தேசியத் தலைவரின் கூற்றில் மாலை 06:23 இற்கு கிழக்குப் பிராந்தியத்தில் பிறை காண முடியும் என குறிப்பிட்டிருந்தார். இப்பிறையானது சுமார் 14/15 நிமிடங்களுக்கு நிலைக்கும் என குறிப்பிட்டதன் பிரகாரம் அன்று மாலை 06:30 மணியளவில் கிண்ணியாவின் பல பிரதேசங்களில் பிறை தென்பட்டுள்ளமை ஊர்மக்களால் ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கிண்ணியா உலமா சபையின் பிறைக் குழுவினர் விசாரித்து உறுதிப்படுத்திய பின் அன்று பிற்பகல் 06.58 இற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இவ்வறிவிப்பு காலம் தாழ்த்திய தகவல் என தேசியத் தலைவர் தனதுரையில் குறிப்பிட்டது எந்தளவு பொருத்தமானது?

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
கிண்ணியா கிளை


Disqus Comments