Friday, August 9, 2013

இரு மொழிகளில் ஆறுமாதங்களுக்குள் அடையாள அட்டை

தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் ஆறு மாதங்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் அறிவித்துள்ளார்.

அத்துடன் மூன்று வருடங்களுக்கு பின்னர்  தேசிய மொழிகள் இரண்டிலும் இணை மொழியான ஆங்கிலத்திலும் தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றுமு; அவர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

தமிழ் மொழியை புறக்கணித்துவிட்டு சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து 18 வயதான சிங்கள இளைஞர் ஒருவர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மும்மொழிகளிலும் இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துவருவதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சவிந்தரா பெர்னாண்டோ உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜுன் 20 வியாழக்கிழமையன்று தெரிவித்திருந்தார்.

சகல சிங்களவர்களுக்கும் தனிச்சிங்களத்தில் மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பது இனங்காணுதல் என்னும் நோக்கத்தை மறுப்பதாக உள்ளது என்றும் அவர் தனது அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழ், நிர்வாக மொழியாகவுள்ள வடக்கு-கிழக்கு பிராந்தியங்களில் வாழ்தல், வேலைச்செய்தல் அல்லது அங்கு போய்வருதல் என்பவற்றை கருத்தில் எடுப்பதைக்கூட இது தடுத்துள்ளது என்றும் மனுதாரரான ஏ.பி.தனஞ்சய குருகே தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கு பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான சலீம் மர்சூப், பிரியசத் டெப் ஆகியோர் முன்னிலையில் ஜுன் மாதம்  20 ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

சிங்கள இன மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சகல அடையாள அட்டைகளிலும் உள்ள விபரங்கள் தனிச்சிங்களத்தில் மட்டுமே உள்ளன. இவை அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய உத்தியோக,தேசிய மற்றும் நிர்வாக மொழிகள் இல்லை.

அரசியலமைப்பின் 18 ஆவது,19 ஆவது உறுப்புரைகளின் பிரகாரம் சிங்களமும் தமிழும் இலங்கையின் தேசிய மொழிகளாகும். உறுப்புரை 22 வடக்கு கிழக்கில் தமிழ் நிர்வாக மொழியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே, தேசிய அடையாள அட்டையில் சிங்கள மொழியில் மட்டும் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமையானது தனது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை நேற்றைய விசாரணையின் போதே பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சவிந்தரா பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கு ஓகஸ்ட் 7 ஆம் திகதிக்கு அன்று ஒத்திவைக்கப்பட்டது.

நேற்றைதினம் மன்றில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் தமிழ், சிங்களம் ஆகிய இருமொழிகளிலும் ஆறு மாதங்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததையடுத்து வழக்கு விசாரணை ஒக்டோபர் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.(TM)
Disqus Comments