2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தற்போது பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சமர்ப்பிக்கும் பத்தாவது வரவு-செலவுத்திட்டம் இதுவாகும்.
இதன்போது,
கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் குறிப்பிடத்தக்களவு பொருளாதார அபிவிருத்தி
ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்கால சந்ததியினருக்கு நவீன பொருளாதாரக் கட்டமைப்பை
ஏற்படுத்திக் கொடுப்பது கடமையாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
முன்னாள்
விடுதலைப்புலி போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுவித்தமையை
சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் அபிவிருத்திக்கு சர்வதேச சமூகம்
வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றியையும் தெரிவித்தார்.
அத்துடன்,
நாட்டின் அபிவிருத்திக்குத் தம்முடன் கைகோர்த்து செயலாற்ற தமிழ் தேசியக்
கூட்டமைப்பிற்கு தாம் மீண்டும் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்தார்.
கல்வி
மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்த
அவர், ஆசிரியர் நியமனங்களுக்கான முன்னெடுப்புகளையும் தாம்
மேற்கொண்டுள்ளதாகக் கூறினார்.
அத்துடன், 25000 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொழில்நுட்பக் கல்வியில் இலங்கை 45 வீத வளர்ச்சிளைக் கண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
தாம்
ஜனநாயகத்திற்கு பெறுமதி சேர்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வடக்கில்
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100,000 வீடுகளை அமைத்துக்
கொடுத்திருப்பதாகவும் கூறினார்.
எதிர்வரும் 2017ஆம் ஆண்டளவில் வடக்கு மற்றும் இரத்தினபுரிக்கான அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவுறும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் 8 வீதத்தால் உயர்வடைந்திருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டு
வரவு செலவுத் திட்டத்தில் தபால் சேவை அபிவிருத்திக்கு 1500 மில்லியன்
ரூபாயினை ஒதுக்கியுள்ளதாகவும் ரயில்வேத் துறையில் காணப்படும் சம்பளப்
பிரச்சினையை நிவர்த்தி செய்ய 2000 மில்லியன் ரூபாவினை ஒதுக்கவுள்ளதாகவும்
குறிப்பிட்டார்.
2014/2015ஆம் ஆண்டு பெரும்போகத்திற்கான விதை நெல்
விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் உர மானிய சலுகை தொடர்ந்தும்
வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், தேயிலை மற்றும் இரப்பர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்தினை நவீனப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆடைத்துறைத்
தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத்
தெரிவித்த ஜனாதிபதி, நன்னீர் மீன்பிடித்துறை அபிவிருத்தி செய்யப்படும்
எனவும் குறிப்பிட்டார்.
மேலும்….
- ஊடகவியலாளர்களுக்கான கடன் திட்டம் விரிவாக்கம்
- புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு 500 – 1500 ஆக அதிகரிப்பு
- ஆரம்பப் பாடசாலைகள் இல்லாத அனைத்து இடங்களிலும் முன்பள்ளிகள் அமைப்பதற்கு நடவடிக்கை
- பாலுக்கான நிர்ணயிக்கப்பட்ட விலை 60 ரூபா
- ரப்பருக்கான நிர்ணயிக்கப்பட்ட விலை 1 கிலோகிராமிற்கு 300 ரூபாவால் அதிகரிப்பு
- சமுர்த்தி கொடுப்பனவு 3000, 2000 மற்றும் 1000 ரூபாவால் அதிகரிப்பு
- விசேட தேவையுடைய மாணவர்களுக்கான மாதாந்த போக்குவரத்திற்கான கொடுப்பனவு 750 ரூபாய்
- வயோதிபர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு 2000 ரூபாவாக அதிகரிப்பு
- விசேட நகர அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இலங்கையின் முக்கிய நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படும்
- குழந்தைகளுக்கான பால் உணவுப் பொருட்களின் இறக்குமதி வரி நீக்கப்படும்
- முன்பள்ளி மாணவர்களுக்கு போஷாக்கான காலை உணவு வழங்க நிதி ஒதுக்கீடு
- மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் விமானக் கட்டுமானப் பிரிவு ஸ்தாபிக்கப்படும்
- மஹாபொல புலமைப்பரிசில் 4000 ரூபாவாக அதிகரிப்பு
- ஹோட்டல்கள், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகத்துறைகளுக்கான மின்சாரக் கட்டணம் நவம்பர் மாதம் முதல் 25 வீதத்தால் குறைக்கப்படும்.
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு காப்புறுதி மற்றும் ஓய்வூதியத் திட்டம்
- சுகததாச மற்றும் கெத்தாராம விளையாட்டரங்குகளின் வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
- அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2200 ரூபாவால் அதிகரிப்பு
- அரச ஊழியர்களுக்கான ஆகக்குறைந்த மாதாந்த சம்பளம் 15,000 ரூபாவாக அதிகரிப்பு
- பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நிவாரண விலையில் மோட்டார் சைக்கிள்
- ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளை 2015 ஆம் ஆண்டில் தீர்ப்பதற்கு விசேட திட்டம்
- ஊழியர்கள் சார்பாக தொழில் வழங்குனர்கள் செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி 12% இலிருந்து 14% ஆக அதிகரிப்பு
- அரச வங்கிகளில் முதியோர் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 12% வட்டி