Saturday, December 27, 2014

தொடரும் அலுத்கமை அவலங்கள். பள்ளிவாசலைக் கட்டிவருக்கே பள்ளியிலிருந்து உடை

இரண்டு வேன்கள், 05 லாரிகள், 03 மோட்டார் சைக்கில்கள், மனைவியின் நகை 25 பவுன்கள், மகளின் 35 பவுன் நகை, வாகனத்தில் இருந்த நான்கரை லட்சம் ரூபா பணம், வீட்டில் இருந்த 60 ம் ரூபா, மற்றும் வீட்டுக்கு அருகில் இருந்த அலுவலகத்தில் இருந்த 80 ஆயிரம் ரூபா ஆகியவை கொள்ளையிடப்பட்டு, வீடு, வாகனங்கள் மற்றும் அலுவலகம் என்பன தீ வைத்து அழிக்கப்பட்டு சுமார் 12 கோடி ரூபாவுக்கும் மேல் நஷ்டப்பட்டு நிர்கதியான நிலையில் இருக்கும் தர்கா நகர், மிலிட்டரி வத்தை பகுதியில் வசிக்கும் சகோதரர் ஸரூக் ஹாஜியார் அவர்களை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த வேலை சந்தித்தோம்.

கடந்த 14.06.2014 ம் நாள் பொது பல சேனா தலைமையில் அளுத்கமையில் நடத்தப்பட்ட இனவாத கூட்டத்தைத் தொடர்ந்து முஸ்லிம்களை தாக்குவதற்காக ஆயுதங்களுடன் இனவாதிகள் எமது ஊருக்குள் நுழைந்தார்கள். நாங்கள் எங்கள் வீட்டு கேட்டை அடைத்துவிட்டு பாதை விளக்குகளையும் அணைத்து விட்டு உள்ளே இருந்து கொண்டிருந்தோம்.

 அப்போது எங்கள் வீட்டுக்கு அருகில் வந்த இனவாதிகள் “தம்பிலா” வீட்டுக்குள் தான் இருக்கின்றான் எனக் கூறி எனது வீட்டு மெயின் கேட்டை உடைத்தார்கள். (தம்பிலா என்பது முஸ்லிம்களை குறிப்பதற்காக கொச்சையாக பயன்படுத்தும் ஒரு வார்தையாகும்) விற்பனைக்காக வைத்திருந்த 03 மோட்டார் சைக்கில்களையும் இவ்விடத்தில் போட்டு தீ வைத்தார்கள். அவர்கள் அதிகமானவர்கள் இருந்ததினால் அவர்களை எதிர்த்து எங்களால் போராட முடியவில்லை. 

உள்ளே நுழைந்தவர்கள் எனது சொத்துக்களை கொள்ளையிட ஆரம்பித்தார்கள். 

இன்னொரு சாரார் எனக்கு கடுமையாக தாக்கினார்கள் “என்னை அடிக்க வேண்டாம் நான் இருதய சத்திர சிகிச்சை செய்து கொண்ட நோயாளி என்னை விட்டு விடுங்கள்” என்று எனது சட்டையை திறந்து நெஞ்சைக் காட்டி அவர்களிடம் கெஞ்சினேன். அவர்களோ “உன்னை கொலை செய்துவிட்டுத் தான் போவோம்” என்றார்கள். எனது சொத்துக்களை கொள்ளையிட்டவர்கள், விற்பனைக்காக வைத்திருந்த வாகனங்கள் மற்றும் எனது அலுவலகம் ஆகியவற்றுக்கு தீ வைத்து எரித்தார்கள்.


அல்லாஹ்வே எங்கள் உயிர்களை காப்பாற்றினான் இல்லாவிட்டால் அவர்கள் எனது சொத்துக்களுடன் சேர்த்து என்னையும் எனது குடும்பத்தினரையும் கொலை செய்திருப்பார்கள். நான் கொடுத்த தர்மத்தின் மூலமாகவே இறைவன் என்னை காப்பாற்றினான். என்பதைத் தவிர வேறு பதில் என்னிடம் இல்லை.

நான் வாழும் இப்பகுதி மக்களுக்கும் எனக்கும் இது வரைக்கும் எவ்வித பகையும் இல்லை. இந்த ஊர் பள்ளியை கட்டிக் கொடுத்தவன் நான் ஆனால் இன்று நான் உடுத்திருக்கும் இந்த உடை பள்ளியினால்தான் எனக்கு கிடைத்தது. இந்தப் பகுதி மக்களுக்கு நான் நிறைய உதவிகள் செய்துள்ளேன். சிங்கள, முஸ்லிம் வேறுபாடு பாராமல் நான் அனைவருக்கும் உதவி செய்துள்ளேன். முஸ்லிம்களை போல நிறைய சிங்கள இளைஞர்களின் தொழில் வாய்ப்புகளுக்கும் உதவி செய்துள்ளேன்.

அரச அலுவலகங்களுக்கும் நிறைய உதவிகளை செய்துள்ளேன். அளுத்கம போலிஸ் நிலையத்தின் போக்கு வரத்துப் பிரிவில் ஒட்டப்பட்டுள்ள ஒவ்வொரு டையில்ஸ்சும் நான் வாங்கிக் கொடுத்தவை ஆனால் எனது சொத்துக்கள், சூரையாடப்பட்டு, நான் தாக்கப்பட்டு, எனது சொத்துக்களுக்கு தீ வைக்கப்படும் போது போலிசார் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

எனது மகனை அவர்களில் சிலருக்குத் தெரிந்திருந்த காரணத்தினால் “நீ இருப்பதினால் உன்னையும், உன் தகப்பனையம் விட்டுச் செல்கின்றோம்” என்று கூறிய ஒருவன் எங்கள் வீட்டு டிவி யை தூக்கிக் கொண்டு சென்றான். 

பொது மக்களுக்கு மாத்திரமன்றி இரானுவத்திற்கும், போலிசுக்கும் நிறையவே உதவிகளை செய்த என்னை இனவாதிகள் தாக்கும் போது போலிசாரோ, இரானுவமோ எனக்கு உதவிக்கு வரவேயில்லை. 

12 கோடிக்கும் மேல் நஷ்டத்தை சந்தித்த சகோதரர் ஸரூக் ஹாஜியார் அவர்கள் தற்போது உதவிகள் ஏதும் இன்றி தவித்துக் கொண்டிருக்கின்றார். 

“எனது நண்பர் ஒருவர் எனக்கு பத்தாயிரம் ரூபா பண உதவி செய்தார் இந்தத் தருனத்தில் அது எனக்கு மிகப்பெரும் உதவியாக அமைந்தது”. என்று தனது நிலையை வெளிப்படுத்தினார். 

குறித்த சகோதரரின் நிலைமைய அவதானித்த ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம் அவருக்கு 50000 (ஐம்பதாயிரம்) ரூபா நிதியுதவி வழங்கியது. 

சகோதரர் ஸரூக் ஹாஜியார் அவர்கள் தனது இரண்டு கைகளையும் நீட்டி நிவாரண உதவியைப் பெற்றுக் கொள்ளும் போது “பலருக்கும் நான் வாரி வாரி வழங்கியிருக்கின்றேன். நான் அள்ளிக் கொடுத்ததினால் தான் அல்லாஹ் எனக்கு தற்போது உங்கள் மூலம் உதவியளித்திருக்கின்றான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரையும் மீறி கதறி அழுததைப் பார்த்த அந்த நேரம் உள்ளமே இறுகியது. அல்லாஹ் அவருடைய வாழ்வாதாரத்தில் பரக்கத் செய்ய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திப்போமாக! ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 02:155) 
நன்றி :- http://rasminmisc.com/aluthgama-awalam/





Disqus Comments