Wednesday, July 15, 2015

அம்பாறை மாவட்டத்தில் மயிலுக்கும் மரத்துக்கும் இடையிலான பணிப்போர்.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். கட்சி மீதான பாசம், தலைமை மீதான பற்றுக் காரணமாகவே அவர் தெரிவித்திருக்கலாம். அதில் தவறு இல்லை. இவ்வாறுதான் நானும் முன்னர் நினைத்திருந்தேன். ஆனால், அணமைய காலத்திலும் நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி ஏற்பாடுகளின் போதும் வேட்பாளர்களை இந்தக் கட்சி தெரிவு செய்த சமயத்திலும் நிகழ்நத சில விடயங்கள் அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்றப் பிரதிநித்துவம் மூன்றாக அமையாது என்ற கணிப்பையே நான் செய்து கொண்டேன்.

கல்முனை தொகுதியை பொறுத்த வரையில் சாய்ந்தமருது என்ற பிரதேசத்தை எந்த அரசியல்வாதியாலும் புறந்தள்ளி தேர்தலில் போட்டியிட முடியாது அவ்வாறு அந்த ஊரை கணக்கெடுக்காமல் போட்டியிட்டாலும் அது அவர்களுக்கு வெற்றியை வாய்ப்பை வழங்கமாட்டாது என்பதே எனது நிலைத்த நம்பிக்கை. கல்முனைத் தொகுதியில் சாய்ந்தமருதுவினால் மட்டும் ஒரு எம்.பியை உருவாக்க முடியாவிட்டாலும் ஓர் எம்.பி உருவாவதற்கு சாய்ந்தமருது தேவை என்பதனை மறுக்க எவரேனும் முயற்சித்தால் அது அவர்களின் தவறான கணிப்பாகும்.

சாயந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்ற விடயத்தில் அக்கறையுடன் முஸ்லிம் காங்கிரஸ் செயற்படவில்லை என்பதும் அவ்வாறு செயற்பட்டிருந்தால் அதனைப் பெற்றிருக்க முடியும் என்றும் அந்த மக்கள் இன்றும் அங்கலாய்க்கின்றனர். இந்த விடயத்தில் சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகம் தலையிட்டும் முடிவுகள் ஏமாற்றமாகவே அமைந்தது.

இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களும் சாய்ந்தமருது மக்களுக்கு என்ன நியாயத்தைக் கூறி ஆற்றப் போகிறார்களோ தெரியவில்லை. அவ்வாறான நியாயங்கள் அந்த மக்களிடம் சபை ஏறுமா என்பதும் கேள்விக்குறிதான்.

ஏனெனில், சாய்ந்தமருவைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தரும் சிரேஷ்ட உறுப்பினருமான ஜெமீல் மற்றும் சிராஸ் மீராசாகிப் ஆகியோர் இப்போது அந்தக் கட்சியில் இல்லை. அவர்கள் இருவரும் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து செயற்படுவது தெரிந்ததே. இவர்கள் இருவரும் சாய்ந்தமருதில் உள்ளுராட்சி சபை ஒன்று தேவை என்ற விடயத்தில் கருத்தொருமை கொண்டவர்கள். எனவே, இந்த விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தங்கள் தரப்பு நியாயத்தை எவ்வளவுதான் எடுத்துக் கூறினாலும் இவர்கள் இருவரும் இந்த விடயத்தில் என்ன நடந்தது என்பதனை தங்களது தேர்தல் பிசார பாடு பொருளாக முன்னெடுத்தால் அவர்கள் கூறுவதனையே மக்கள் நம்புவர். சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை ஏன் கிடைக்கவில்லை என்பது தொடர்பில் ஜெமீல் பல விடயங்களை அம்பலப்படுத்தவுள்ளார் என கூறப்படுகிறது.

மேலும், இந்தக் காலக் கட்டத்தில் ஜெமீல் முஸ்லிம் காங்கிரஸுக்கு முக்கியமான ஒருவர். அவர் எப்படிப்பட்டவர் என்ற விமர்சனங்கள் வேறானவை. ஆனால், அவரை அந்தக் கட்சி அணைத்தே சென்றிருக்க வேண்டும். அதன் மூலம் வாக்குச் சரிவிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்து கொண்டிருக்கலாம். அது போன்றே சிராஸ் மீராசாகிப்பின் இழப்பும். அவரையும் முஸ்லிம் காங்கிரஸ் அணைத்தே சென்றிருக்க வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு.

ஜெமீல், சிராஸ் மீராசாகிப் ஆகியோருக்கு சாய்ந்தமருதுவில் தனிப்பட மக்கள் செல்வாக்கு இல்லாமல் இல்லை அவர்களின் ஆதரவாளர்கள் அகில இலங்கை இலங்கை மகக்ள் காங்கிரஸுக்கே வாக்களிப்பர். இது சாயந்தமருதுவில் முஸ்லிம் வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன்.

இது தவிர, அம்பாறை மாவட்டத்தின் வேட்பாளர் பட்டியலில் தவம் அவர்களை முஸ்லிம் காங்கிரஸ் இணைத்துக் கொண்டிருந்தால் அந்தக் கட்சி பலம் பெற்றிருக்கும். அட்டானைச்சேனை, அகக்ரைப்பற்று பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் தங்களுக்கு ஒரு எம்.பி இல்லை என்ற மனவேதனையைக் கொண்டவர்கள். இந்தக் குறையை தவத்தை களத்தில் இறக்கியிருந்தால் நீக்கியிருக்க முடியும்.வாக்கும் அதிகரித்திருக்கும்.

அத்துடன் இந்தப் பிரதேசங்கள் ஏதோ ஒரு வகையில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் ஆளுகையின் கீழே இருந்து வந்தன. அதனை உடைத்தெறிந்து அங்கு முஸ்லிம் காங்கிரஸை மையம் கொள்ள வைக்கக் கூடிய சக்தி தவம் அவர்களிடம் உள்ளது. அட்டானைச்சேனை, அக்கரைப்பற்று பிரதேசங்களில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் கணிசமாக இருந்தாலும் பலமிக்க சக்திகள் களத்தில் இல்லை என்பது உண்மை. தவம், மன்சூர் போன்றவர்கள் இருந்தாலும் அவர்களை முஸ்லிம் காங்கிரஸ் பயன்படுத்தும் விதம் போற்றத்தக்கது அல்ல.

தவம் அவர்களை களத்தில் இறக்கியிருந்தால் அதாவுல்லாஹ்வின் கட்சி சரிவு மேலும் முன்னோக்கிச் சென்றிருக்கும் என்பது எனது கணிப்பு. தவம் நல்லவரா கெட்டவரா என்பதனை விட . அவர் பலதையும் துணிந்து செய்யக் கூடியவர் என்பதனை மறுக்க முடியாது. தேர்தலில் தவம் பெற்றி பெறாது போனாலும் கட்சிக்கான வாக்குகள் அதிகரித்திருக்கும்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர்களில் மன்சூரை தவிர ஏனைய இருவர்களுமான ஹாரீஸ், பைஸல் காசிம் ஆகியோர் தேசிய அரசியலில் ஏலவே அனுபவம் பெற்றவர்கள். ஆனால் இவர்கள் தொடர்பில் மக்களிடம் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. எனவே, புதியவர்களையும் களத்தில் இறக்கியிருக்கலாம்.

இது இவ்வாறிருக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது இன்று இவ்வாறான நிலைமைகளை நாடி பிடித்து அறிந்து கொண்டு அம்பாறை மாவட்டத்தில் தனது அரசியல் காய்களை நகர்த்தி அங்கு தனது நிமையை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளது.

அதாவுல்லாஹ்வின் கட்சியின் சரிவைக் கூட இன்று ரிஷாத் பதியுதீனின் கட்சி நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. அகில இலங்கை மகக்ள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட கால் பதிப்பு இன்று முஸ்லிம் காங்கிரஸுக்கு ஒரு சவாலாகவே அமைந்துள்ளது.

ஜெமீல், சிராஸ் மீராசாகிப், எஸ்.எஸ்.பி மஜீத் தென்கிழக்கு பல்கலைகக்ழக முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் போன்றோர் ஏதோ ஒரு வகையில் அவர்கள் சார்ந்த பிரதேசங்களில் மக்கள் செல்வாக்கை பெற்றவர்கள் என்பதனையும் நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இவர்களின் வருகையானது அகில இலங்கை மகக்ள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இருப்பை மேலும் உறுதி செய்துள்ளது என்றே நான் கருதுகிறேன்.


Disqus Comments