Monday, July 13, 2015

அனைத்து சிறார்களுக்கும் சிறந்த கல்வியை ஏற்படுத்திக் கொடுப்போன் - ஜனாதிபதி மைத்திரி.

(Hazina Borham) நாட்டின் பல்வேறு மாகாணங்களில் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் அழைப்புகள் மத்தியில் பாடசாலையில் இடம்பெறும் வைபவங்களின்போது, பிள்ளைகளிடையே சென்று அவர்களுடன் அளவளாவி அவர்களின் சிக்கல்களை தீர்த்து வைப்பதன்மூலம் தாம் அளப்பறிய மகிழ்ச்சியடைவதால், பாடசாலை விழாக்களில் கலந்துகொள்வதற்கான அழைப்புகளுக்கு முன்னுரிமையளிக்கின்றேன் என சனாதிபதி தெரிவித்தார்.
பல மைல்கள் நடந்து சென்று கடுமையான அனுபவங்கள் பலவற்றின் மத்தியில் பெற்ற பாடசாலைக் கல்வியை இன்று தான் இரசனையுடன் நினைவுகூர்ந்தாலும் எதிர்கால மாணவ சந்ததியினருக்கு அந்த கடுமையை உரித்தாக்குவதற்கு தான் தயாராக இல்லை எனவும் சனாதிபதி கூறினார்.
அதனால் நகரத்திலும் கிராமத்திலும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமான வசதிகளை வழங்கி நாட்டின் அனைத்துப் பிள்ளைகளும் சிறந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் சனாதிபதி தெரிவித்தார்.
கொட்டாஞ்சேனை புனித பெனடிக் வித்தியாலயத்தின் 150வது ஆண்டு நிறைவு விழாவில் கடந்த (10) திகதி முற்பகல் கலந்துகொண்டபோது சனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விழாவில் உரை நிகழ்த்திய சனாதிபதி அவர்கள், தமது அறிவு, ஆற்றல், திறமை என்பவற்றின் ஊடாக பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை வெற்றிகொள்ளக்கூடிய கல்வித் திட்டமொன்றை நாட்டில் உருவாக்குவதாக கூறினார்.
அறிவை மையமாகக் கொண்ட கல்வியைப் போன்று திறன் விருத்திக் கல்வியும் மிக முக்கியம் என்பதை சுட்டிக்காட்டிய சனாதிபதி அவர்கள், இன்று உலகத்தில் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கின்ற அனைத்து நாடுகளிலும் கல்விக் கொள்கைகள் அதற்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் சுட்டிக் காட்டினார்.
1865ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கொட்டாஞ்சேனை புனித பெனடிக் வித்தியாலயத்தின் 150வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை அஞ்சல் திணைக்களம் வெளியிட்ட முதல் நாள் உறையும் நினைவு முத்திரையும் இதன்போது சனாதிபதி அவர்களிடம் வழங்கப்பட்டது.
வித்தியாலயத்தின் 150வது  நினைவு விழாவை முன்னிட்டு வித்தியாலய வளாகத்தில் நாக மரக் கன்று ஒன்றை சனாதிபதி நாட்டினார்.
முன்னாள் பேராயர் ஒஸ்வல் கோமஸ் அருட் பிதா உள்ளிட்ட அருட் பிதாக்களும் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ஜோன் அமரதுங்க ஆகியோருடன் பாடசாலை அதிபர், திரு.ஜனக பொன்சேகா, ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





Disqus Comments