Friday, September 27, 2013

கட்டார் உலகக் கிண்ண கட்டுமானப் பணிகள் : பலியாகும் தொழிலாளர்கள்?

கட்டாரில் உலகக் கிண்ண கட்டுமானப் பணிகளுக்காக வந்துள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குறிப்பாக நேபாளிகள், கொத்தடிமைகள் போல நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இரண்டு மாதங்களில் 44 பேர் இதய நோயால் உயிரிழந்துள்ளனர். மேலும் உலக கிண்ண கால்பந்து போட்டி ஆரம்பமாகும் முன்பு 4000 கொத்தடிமை தொழிலாளிகள் உயிரிழக்கவும் சாத்தியம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் கட்டாரில் நடைபெறவுள்ள நிலையில், அந்தப் போட்டிகள் தொடர்பான பிரம்மாண்டமான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நிலை குறித்து வெளியாகியுள்ள ஒரு புலனாய்வு அறிக்கை பெரிதும் கவலையடையவைக்கிறது என்று அந்தப் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

லண்டனிலிருந்து வெளியாகும் தி கார்டியன் பத்திரிகை, இந்தக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நேபாளத் தொழிலாளர்கள் பெருமளவுக்கு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

அங்கு நடைபெற்று வரும் துஷ்பிரயோகம் நவீன கால அடிமைத்துவம் என்று கார்டியன் தனது கட்டுரையில் வர்ணித்துள்ளது.

நேபாளத்திலிருந்து வேலைக்காக கட்டார் நாட்டுக்கு வந்துள்ளவர்கள் மிகவும் மோசமான வகையில் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று இந்தப் போட்டிகளை நடத்தும் குழுவினர் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு ஜூன் 4ம் திகதி முதல் ஆகஸ்ட் 8ம் திகதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 44 நேபாள பணியாளர்கள், பணியிடங்களிலேயே இதய நோய்களால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்து, உலகக் கிண்ணம் தொடர்பான கட்டுமான இடங்களில் பணிபுரியும் பணியாளர்களின் உடல் நிலை, அவர்களது நலன், பாதுகாப்பு, மற்றும் கௌரவம் ஆகியவை மிகவும் முக்கியமான ஒன்று எனவும், அவை 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவசியமானது என்றும் போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் கூறுகின்றனர்.

தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக ஊடகங்களில் வந்துள்ள தகவல்கள் குறித்து தாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும், ஜூரிக் நகரில், அடுத்த மாதம் மூன்று மற்றும் நான்காம் திகதிகளில் நடைபெறவுள்ள ஃபிஃபாவின் உயர்மட்டக் கூட்டத்தில் இந்த விஷயம் விவாதிக்கப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Disqus Comments