ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான அனைத்து பிரசார நடவடிக்கைகளும் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறவுள்ளன.
வேட்பாளர்களுக்கு
ஆதரவு திரட்டும் எந்தவொரு பிரசார நடவடிக்கையும் இன்று நள்ளிரவுக்கு
பின்னர் முன்னெடுக்கப்பட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகும் என மேலதிக
தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எ.எல.ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.
அதன்பிரகாரம்,
தேர்தல் அலங்காரங்கள், போஸ்டர்கள் மற்றும் பதாதைகள் இன்று நள்ளிரவுக்கு
முன்னர் அகற்றப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார்.
தேர்தல்
நிறைவுபெறும் வரை எந்தவொரு பிரசார நடவடிக்கையையும் முன்னெடுக்க கூடாது
எனவும், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் குழுக்களின் கட்சி அலுவலகங்களை
நாளை நள்ளிரவுக்கு முன்னர் அகற்ற வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
ஒரு
வேட்பாளருக்கு மாவட்ட ரீதியில் ஒரு கட்சி அலுவலகம் மாத்திரமே இருக்க
வேண்டும் எனவும் அந்த அலுவலகங்கள் எதிர்வரும் 19ஆம் திகதியே ஆரம்பிக்கப்பட
வேண்டும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அந்த அலுவலகங்களில் எவ்வித பிரசார நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல்
சட்டங்களை பாதுகாப்பது தொடர்பில் பொலிஸார் தெளிவூட்டப்பட்டுள்ளதாக மேலதிக
தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய பொலிஸார் ஏற்கனவே விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட
விரோத பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதனை தடுக்கும்
வகையிலும் போஸ்டர்கள் மற்றும் பதாதைகள் அகற்றுவதற்காகவும் பொலிஸார் பல்வேறு
திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.
எதிர்வரும்
19ஆம் திகதி முதல் பொலிஸார் மற்றும் தேர்தல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள்
இணைந்து தேர்தல் அலுவலகங்களை அகற்றும் நடவடிக்கையை
முன்னெடுக்கவுள்ளதாகவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எ.எல.
ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, சட்டவிரோத பதாதைகள்
மற்றும் போஸ்ட்டர்களை அகற்றவதற்கான விசேட திட்டமொன்றை வகுத்துள்ளதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன
தெரிவிக்கின்றார்.
இன்று நள்ளிரவுக்கு பின்னர் விசேட பொலிஸ்
குழுக்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், மொனராகலை மற்றும் பதுளை
மாவட்டங்களில் நடமாடும் சேவைகள், மோட்டார் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
அத்துடன்
தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் செயற்படுபவர்கள் கைது
செய்யப்படவுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களை பொலிஸார்
கைப்பற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் நாளை
முதல் தேர்தல் நிறைவுபெறும் வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன
குறிப்பிடுகின்றார்.
