Sunday, September 14, 2014

அரபு இராஜ்ஜியத்தில் நீரில் மூழ்கி இலங்கையர் இருவர் பலி

(TM) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் உம் அல் குவைன் பிரதேசத்தில் நீரில் மூழ்கி இலங்கையர்கள் இருவர் பலியாகியுள்ளனர்..

வெவ்வேறு இடங்களில் நீந்திக் கொண்டிருந்த போது அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

23 வயதுடைய இளைஞர் இலங்கையர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஹோட்டல் ஒன்றிலுள்ள நீச்சல் தடாகத்தில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் நீந்தியுள்ளார். பின்னர் அவரது நண்பர்கள் தனது அறைக்கு திரும்பியுள்ளனர்.

அதனையடுத்து குறித்த இளைஞன் அடுத்தநாள் காலை நீச்சல் தடாகத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் இரவு அதிக நேரம் நீந்தியமை காரணமாக நீரில் மூழ்கியதை அடுத்து, காலை நீச்சல் தடாகத்தில் சடலமாக  மிதந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மற்றுமொரு 20 வயதுடைய இலங்கையர் ஒருவர் வெள்ளிக்கிழமை மாலை கடலில் நீந்திய போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் நீரில் மூழ்கி தத்தளித்து கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
Disqus Comments