Wednesday, March 11, 2015

சூரியஒளியால் இயங்கும் விமானம் இந்தியாவில் தரையிறங்கியது

உலகை சுற்றிவரும் சாதனைப்பயணத்தை துவங்கியிருக்கும் சூரிய ஒளியால் இயங்கும் விமானம் தனது பயணத்தின் இரண்டாம் கட்டமாக இந்தியாவின் அகமதாபாத் நகரில் வெற்றிகரமாக தரையிறங்கியிருக்கிறது.
solar plane

“சோலார் இம்பல்ஸ்-2’ என்று அழைக்கப்படும் அந்த விமானம் தனது பயணத்தை நேற்று திங்கட்கிழமை அபுதாபியிலிருந்து ஆரம்பித்தது. ஒமானின் தலைநகர் மஸ்கட்டில் திங்கள் இரவு தரையிறங்கியது. அங்கிருந்து செவ்வாய்க்கிழமை(10) காலை தனது இரண்டாம் கட்டப்பயணத்தை ஆரம்பித்திருக்கின்றது.

அரேபியக்கடலை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த விமானம், பாகிஸ்தான் வான்பரப்பில் பறந்து செவ்வாய்க்கிழமை இரவு இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தின் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
அடுத்த ஐந்து மாதங்களில் அனைத்து கண்டங்களுக்கும் பயணிக்கவுள்ள இந்த விமானம், பசுபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களையும் கடக்கவுள்ளது.
solar plane 1

இந்த விமானத்தில் ஒரே ஒரு விமான ஓட்டுனருக்குத்தான் இடம் உள்ளது. திங்களன்று சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த அன்ட்ரூ போர்ஷ்பர்க் விமான ஓட்டுனராக இருந்தார். இரண்டாம் நாளான செவ்வாயன்று பேர்ட்ராண்ட் பிக்கார்ட் விமான ஓட்டுனராக பணியாற்றினார்.

ஓய்வுக்காகவும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காகவும் உலகின் பல நாடுகளில் நிறுத்தப்படவிருக்கும் இந்த விமானம், அப்பகுதிகளில் ‘தூய்மையான தொழில்நுட்பங்கள்’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் பயணிக்கிறது. விமானத்தின் பயண விவரங்கள் இணையத்தில் தொடர்ந்து நேரலையாக பிரசுரிக்கப்படுகிறது.
2050ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் மின்சாரத்திற்கான மூலப்பொருளாக சூரிய சக்தியே பெருமளவில் பயன்படும் என்று ஆய்வறிக்கைகள் கூறும் நிலையில், தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு பெரிய முன்னேற்றமாக இந்த சூரிய ஒளி விமானம் பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் சூரிய மின் கலங்களின் விலை 70 சதவீதம் குறைந்திருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் இதன் விலை மேலும் சரிபாதியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் சூரிய சக்தி நிறுவனங்களில் பணிப்புரிபவர்களின் எண்ணிக்கை நிலக்கரிதொடர்பான நிறுவனங்களில் பணிப்புரிபவர்களைவிட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில், அடுத்த 18 மாதங்களில் காற்றாலை மின்சக்தித் துறைக்கு போட்டியாக சூரியமின்சக்தித் துறை உருவாகும் என்றும், விரைவில் அது எரிவாயுத் துறையுடன் போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் சூரிய சக்தி ஒரு பெரிய உதவியாக இருக்கும் என்று கருதப்பட்டாலும் அது மட்டுமே உலகின் மின்சக்தித்தேவைக்கு ஈடுகொடுக்கப் போதுமானதாக அமையாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
இதற்கு முன்னர் இது போன்ற சூரிய சக்தியால் இயங்கும் விமான முயற்சிகள் வெற்றி பெற்றிருந்தாலும், உலகைச் சுற்றிவர எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி வியக்கதக்க முயற்சியாகவும், கடினமான முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
solar plane 5

சோலார் இம்பல்ஸ் – 1 விமானத்தை விட சோலார் இம்பல்ஸ் – 2 விமானம், அளவில் பெரியதாகவும், மேம்படுத்தப்பட்டதாகவும் உள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி நிறைந்த லித்தியம்ஐயன் மின்கலங்கள் அந்த விமானம் இரவு நேரத்திலும் பறக்கப் பயன்படுகிறது. பசுபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களை கடக்கும் இருட்டு நேரத்தில் இது பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகை சுற்றிவரும் சோலார் இம்பல்ஸ்– 2 விமானத்தின் இந்த பயணம், பருவநிலை முறையாக அமைந்தால் சாத்தியமாகும் என்று கணினிக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும் கணினியின் கணிப்பைத் தாண்டி நிஜத்தில் உலகை சுற்றிவரும் இந்த சூரிய விமானத்தின் சாதனை முயற்சி வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நன்றி: பி.பி.சி

solar 6
solar plane 4
Disqus Comments