ஸ்ரீ லங்கா தாயே...! நம் ஸ்ரீ லங்கா... நமோ நமோ நமோ நமோ தாயே...!' என்று தொடங்கும் தேசிய கீதத்தை தமிழில் பாட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்க் கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பிவிதுரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், இலங்கையின் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை எதிர்ப்பதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அத்துடன், தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்ப்பதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக தினேஸ் குணவர்தனவும், தமிழ் மக்கள், தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடுவதால் அவமானம் ஏற்படப்போவதில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் குறிப்பிட்டுள்ளனர்.
எது எவ்வாறாயினும், தமிழிலும் தேசிய கீதத்தை பாடலாம் என்பதை அறிவிப்பதற்கு ஜனாதிபதியினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்படவேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அறிவித்தது.
தேசிய கீதத்தை தமிழில் பாட எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்று தெவித்த அரசாங்கத்தின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன, இலங்கை அரசியலமைப்பில,; தமிழுக்கும் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதால் தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதிக்குமாறு விசேட சுற்றறிக்கை விடப்படவேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாடலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்திருப்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் வரவேற்றுள்ளது.
எவ்வாறாயினும், தேசிய கீதத்தை தமிழில் பாட அனுமதியளிப்பதானது, இலங்கை அரசியலமைப்பு திருத்தத்தின் 7ஆவது அத்தியாயத்தின் பிரகாரம் குற்றமாகும் என்றும் இதற்கு ஜனாதிபதி அனுமதியளித்திருப்பது தவறாகும் என்றும் மேல்மாகாண அழகியல் விடுத்தியில் நேற்று வியாழக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கம்மன்பில தெரிவித்தார்.
'இலங்கை சோஷலிச குடியரசின் தேசிய கீதம்? 'ஸ்ரீ லங்கா மாத்தா' ஆகும். தேசிய கீதத்தின் சொற்கள் மற்றும் இசை ஆகிய மூன்றாவது உபஆவணங்களாக காணப்படுகின்றன' என்று மேற்படி அரசியலமைப்பு அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1978ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி, இந்த அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்ட போதிலும் அன்று முதல் கடந்த 2010ஆம் ஆண்டு வரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழிலேயே தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது என்று உதய கம்மன்பில மேலும் கூறினார்.
இதேவேளை, அரசியலமைப்பில் வழங்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளமை நல்லதொரு காரியம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தேசிய கீதத்தை தமிழிலட பாட இடமளிப்பதானது, இனவாத சிந்தனைக்கு மேலும் போஷாக்களிப்பதற்கு சமமானதாகும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறினார்.
தமிழ் மக்கள், தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடுவதால் அவர்களுக்கு எவ்வித அவமானமும் ஏற்படப்போவதில்லை. தமிழர்கள் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதைப் போன்று, வேடர்கள் அவர்களது வேடுவ மொழியில் தேசிய கீதத்தைப் பாடக் கேட்டால் அதற்கும் அனுமதியளித்தே ஆகவேண்டும் என்றும் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மாத்திரமே பாடப்பட வேண்டும் என்று முன்னைய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை நீக்குவதற்குப் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய நிறைவேற்று குழு கூட்டத்தில் இந்த விடயத்தை, தான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததையடுத்தே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.
இலங்கையின் தேசிய கீதம் தமிழிலும் சிங்களத்திலும் வடிவமைக்கப்பட்டு இரண்டு மொழிகளிலும் அவரவர் அதனைப் பாடி வந்தனர். இருந்தபோதிலும், தமிழ் மக்கள் குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள், தேசிய கீதத்தில் அதிக அளவு ஈடுபாடு கொண்டிருக்காத ஒரு போக்கு தொடர்ந்து நிலவுகின்றது. இன ரீதியாகத் தாங்கள் ஒடுக்கப்பட்டு வருவதன் காரணமாகவே இந்த உணர்வுக்கு அவர்கள் ஆளாகியிருந்ததாகப் பலரும் கூறிவந்த நிலையிலேயே மீண்டும் இது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
