Tuesday, May 17, 2016

பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி செய்து ஈமானிய சகோதரத்துவம் மற்றும் மனிதத்தையும் வெளிப்படுத்துவோம்


இந் நாட்களில் இலங்கையின் பல பாகங்களிலும் தொடரான அடை மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதை நாம் எல்லோரும் அறிவோம் , இச் சீரற்ற காலநிலையை அடுத்து பல சேதங்களையும் அனர்த்தங்களையும் ஆங்காங்கே மக்கள் முகம் கொடுத்து வருகின்றனர் . 

சில பகுதிகள் நீரில் மூழ்கியதால் நாளாந்த மக்களின் செயற்பாடுகள் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு அவர்களது வாழ்வாதாரத் தேவைகளும் கேள்விக்குறியாக மாறியுள்ள இவ்வேளையில் சில தனியார் தொண்டு நிறுவனங்களும் முஸ்லிம் பள்ளிவாயல் சங்கத்தினர்களும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். 

பொருட்கள் கொடுத்து உதவி செய்ய முடியாதவர்கள் மற்றும் தூரத்தில் அல்லது வெளிநாடுகளில் இருப்போர் இப்பொழுது செய்ய வேண்டிய ஒரே ஒரு ஈமானிய உதவி என்னவெனில் அது அல்லாஹ்விடம் அம்மக்களுக்காகப் பிரார்த்திப்பதாகும் . உங்களது ஒவ்வொரு பிரார்த்தனையிலும் அம்மக்களையும் இணைத்து மனிதத்தையும் ஈமானிய உணர்வையும் வெளிப்படுத்துங்கள் , இதுவே ஒரு முஸ்லிம் தமது ஈமானிய ஆயுதத்தை கையில் ஏந்தும் அருமையான சந்தப்பம் , துஆ ஓர் இறை விசுவாசியின் ஆயுதம் என்ற நபியின் கூற்று பொய்யாகாது என்பதை நம்பிய நீங்கள் கட்டாயம் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாதிப்படைந்த பிரதேச மக்களுக்காகவும் சீரான காலநிலை தொடரவும் இறைவனிடம் மன்றாடி பிரார்த்தனை செய்யுங்கள்.

இயற்கை என்பது இறைவன் எமக்களித்த அரும்பெரும் வளமாகும் , இதற்கு சேதம் வருவதும் மனிதனின் வாழ்வைப் பாதிக்கும் ஓர் காரணி போன்று மனித இனம் அழிவதும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை விளங்கிய நாம் இத்தருணத்தில் அதிகம் அதிகம் அம்மக்களுக்காப் தூய மனதுடன் இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திப்போம். 

அதேவேளை தொடர் அடை மழை பொழியும் பகுதிகளில் வாழ்வோர் பின்வரும் " அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா " எனும் துஆவை அதிகமாக ஓதி வருவது மிகவும் பொருத்தமாகும். மேலும் இது அனைவரின் ஈமானையும் இறைவன் சோதனை செய்வதற்கான ஓர் நேரமாகும் , இச்சந்தப்பங்களில் இறைவனுக்கு ஏசுவதை முற்றாகத் தவிர்த்து அவனிடம் முழு நம்பிக்கையுடன் பிரச்சினையை முறையிட்டு பிரார்த்தனை செய்யுங்கள். அந்த வல்லவன் மிகவும் இரக்கமுள்ளவன், துஆக்களை ஏற்பதில் அவனுக்கு நிகராக யாருமில்லை என்ற நம்பிக்கையை உள்ளத்தில் உறுதி பூண்டு கையேந்தி துஆக் கேளுங்கள் நிச்சயமாக அல்லாஹ் துஆக்களை ஏற்று விடையளிப்பான்.

எனவே யா அல்லாஹ்! இலங்கையின் எப்பகுதிகளிலெல்லாம் சீரற்ற காலநிலையும் , அனர்த்தங்களும் சேதங்களும் நிகழ்கின்றனவோ அப்பகுதிகளை பாதுகாத்து சீரான காலநிலையை ஏற்படுத்துவதோடு மக்கள் மீண்டும் தமது வழமைக்கு திரும்பும் நிலையையும் ஏற்படுத்தியருள்வாயாக! ஆமீன் 

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
17/05/2016
Disqus Comments