இலங்கை தலைநகர் கொழும்புவின் புறநகர் பகுதியான தெகிவளை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு மாநகர சபை தடை விதித்துள்ளது.
அந்த பகுதியிலுள்ள பௌத்த கடும் போக்காளர்களின் எதிர்ப்புகள் காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு தெகிவளை - கல்கிசை மாநகர சபையினால் பள்ளி வாசல் விஸ்தரிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
அந்த அனுமதியை ரத்து செய்யும் வகையிலான உத்தரவொன்றை மாநகர முதல்வர் அறிவித்துள்ளதோடு அதன் பிரதியை போலீசுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக பள்ளி வாசல் நிர்வாகம் கூறுகின்றது.
இந்த தடை பற்றி போலீசாராலும் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிக்கின்றது.
புனித ரமழான் நோன்பு காலத்தில் பள்ளிவாசல் விஸ்தரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தோது இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை குறித்து பிரதமர் ரணில் விக்கிரசிங்க மற்றும் சட்டம் , ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க உட்பட உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அனுமதியை மாநகர முதல்வரால் ரத்து செய்ய முடியாது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
புதன்கிழமை இரவு அமைச்சர்களான ரிஷாத் பதியுதின், கபீர் ஹாஷிம், எம். எச் அப்துல் ஹலீம், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உட்பட பலரும் பள்ளிவாசலுக்கு நேரடியாக சென்று இந்த தடை குறித்தும் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் பள்ளிவாசல் நிர்வாகத்துடன் கலந்துரையாடியுள்ளனர்.
ஏற்கனவே கண்டியில் பள்ளிவால் கோபுர நிர்மாணப் பணிகளுக்கு பெளத்த கடும்போக்காளர்களின் எதிர்ப்பை அடுத்து, அந்தப் பணிகளுக்கு அதிகாரிகள் கடந்த வாரம் தடை விதித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
(பிபிசி)