சவூதி அரசினால் இலங்கை போன்ற பல பின் தங்கிய நாடுகளுக்கு முஸ்லிம்களுக்கு விநியோகிக்கவென பேரீத்தம் பழம் நீண்ட காலமாக வழங்கப்பட்டு வருகிறது ஏழ்மை நிலையில் உள்ள அறபு நாடுகளுக்கும் வழங்குகிறது.
பொதுவாக ஒரு நாடு தனது நாட்டில் எப்பொருள் அதிக உற்பத்தியை கொண்டுள்ளதோ அதனை வழங்கும். இலங்கை தேயிலையை நன்கொடையாக சில பாதிப்படைந்த நாடுகளுக்கு வழங்கியதுண்டு. இந்த வகையில் சவூதி அரேபியாவுக்கு முஸ்லிம்கள் நன்றிக்கடன் பட்டுள்ளனர்.
இந்தப்பழங்களை சவூதி அரேபிய தூதரகம் அரசியல் முறைப்படி இலங்கையின் முஸ்லிம் கலாச்சார அமைச்சுக்கு வழங்குவதுடன் அதன்பணி முடிவடைந்து விடுகிறது. அதன்பின் இதனை முறையாக விநியோகிக்கும்பணியை கலாசார திணைக்களம் சரியாக நடைமுறைப்படுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக உள்ளது. அத்துடன் கடந்த காலங்களில் இப்பழம் கொழும்பு சந்தைகளில் விலைக்கு விற்கப்பட்டன என்றும் இன்னும் முஸ்லிம் அல்லாத அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டன என்ற குற்றச்சாட்டுக்களும் அதிகமாக உள்ளன. இது பற்றிய திருப்திகரமான பதில்கள் திணைக்களத்திடமிருந்து கிடைக்கவில்லை என்பது கவலையான ஒன்று.
திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்ற ஈத்தம்பழங்களின் தொகை, அவை எவ்வாறு யார் யாருக்கு வழங்கப்பட்டன என்பதை இலங்கையில் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு அ.இ.ஜமியதுல் உலமாவுக்கும் அறிக்கையாக திணைக்களத்தால் அனுப்பப்பட்டிருந்தால் இது ஒரு பிரச்சினையாக எழுந்திருக்காது.
இம்முறை மேற்படி ஈத்தம்பழம் நோன்பு ஆரம்பமாகி சுமார் 8 நாட்களாகியும் இலங்கை முஸ்லிம்கள் பலருக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உலமா கட்சிக்கு வந்தவண்ணமுள்ளது. இது பற்றி நாம் விசாரித்த போது இது உண்மை என அறியக்கிடைத்துள்ளது.
உலமா கட்சியினால் மக்களுக்கு வழங்கப்படவென ஈத்தம்பழம் கேட்டு முஸ்லிம் திணைக்களத்துக்கு கடிதம் அனுப்பப்பட்ட போது அனைத்தும் பள்ளிவாயல்களுக்கு அனுப்பப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனாலும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு இது இன்னமும் கிடைக்கவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.
ஆகவே இது விடயத்தை முஸ்லிம்களுக்கு தெளிவு படுத்தவேண்டிய கடமை முஸ்லிம் சமய கலாசார அமைச்சுக்கும் திணைக்களத்திற்கும் உண்டு என்பதை உலமா கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வண்ணம்
மௌலவி முபாறக் அப்துல் மஜீத்
தலைவர்
உலமா கட்சி