Thursday, June 9, 2016

சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தாத தேர்தல் முறைக்கு நாம் ஆதரவில்லை..சர்வதேச தேர்தல் திருத்தச்சட்ட நிபுணரிடம் றிசாத் எடுத்துரைப்பு..

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச தேர்தல் நிபுணர் வொலோனை, அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

தேர்தல் நடைமுறை மாற்றம் தொடர்பில் வெளிநாட்டிலிருந்து அழைக்கப்பட்டு, அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி வரும் நிபுணர் வொலோனை, கைத்தொழில்,வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (08/06/2016) பாராளுமன்றத்தில், அமைச்சரின் காரியாலாய அறையில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, நவவி எம்.பி, இஷாக் எம்.பி உட்பட பலர் பங்கேற்று, தேர்தல் முறை மற்றம் தொடர்பில் தமது கட்சியின் நிலைப்பாட்டை நிபுணர் வொலோனிடம் விளக்கினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்,

சிறுபான்மை மக்களாகிய தமிழ், முஸ்லிம், கத்தோலிக்க, மலையக மக்கள் அவர்களுடைய விகிதாசாரத்திற்கு ஏற்ப  தற்பொழுது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். எனவே, எமது சிறுபான்மை மக்களின் இன விகிதாசாரத்துக்கு ஏற்ப, பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுவராத, எந்தவொரு தேர்தல் நடைமுறை மாற்றத்துக்கும், தமது கட்சி ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டாது, என்ற உறுதியான நிலைப்பாட்டில் தமது கட்சி இருப்பதாக இதன்போது அமைச்சர் எடுத்துரைத்தார்.

இது குறித்து ஏற்கனவே ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நாங்கள் தெளிவுபடுத்தி இருக்கிறோம் என்பதையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு சுட்டிக்காட்டினார்.





Disqus Comments