அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றால், எந்த மதத்துக்கும் தடை விதிக்க மாட்டேன் என்று ஜனநாயகக் கட்சி அதிபர் பதவி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் உறுதியளித்தார்.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பிலான வேட்பாளராக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டார்.
பென்சில்வேனியா மாகாணம், ஃபிலடெல்ஃபியாவில் நடைபெற்று வரும் ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனை ஏற்று, மாநாட்டில் ஹிலாரி கிளிண்டன் வியாழக்கிழமை பேசியதாவது:
அமெரிக்கா தன்னைத் தானே உணர்ந்து கொள்ள வேண்டிய தருணமிது.மிகப் பெரிய சக்திகள் நம்மை சிதறடிக்க நினைக்கின்றன.நம்பிக்கையும், ஒற்றுமையும் சீரழிந்து வருகின்றன.
இந்த நேரத்தில் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு தேசமாக அமெரிக்காவை வழிநடத்த விரும்புகிறேன்.
நான் அதிபரானால் எந்த மதத்துக்கும் தடை விதிக்க மாட்டேன்.எல்லோரையும் சரிசமமாக நடத்துவேன்.
ஜனநாயகக் கட்சி ஆட்சியில், குண்டு சத்தம் இல்லாமலே பேச்சுவார்த்தை மூலம் ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துக்கு மூடுவிழா நடத்தும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் சென்று, இஸ்ரேலில் பாதுகாப்பை உறுதி செய்வேன்.