Thursday, September 22, 2016

ஏறாவூர் இரட்டைக் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில்


மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும், இச்சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரியும் அப்பிரதேசத்தில் இன்று (22) வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டதுடன், அங்கு பூரண கடை அடைப்பும் மேற்கொள்ளப்பட்டது. 

ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் சுமார் 56 நிறுவனங்களின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

ஏறாவூர் பிநூர்முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) மற்றும் அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பாணுவும் கொலை செய்யப்பட்ட நிலையில், கடந்த 11ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டனர். 

இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவிக்கையில், 

இக்கொலை தொடர்பான சந்தேக நபர்களில் முக்கிய சூத்திரதாரி கைதுசெய்யப்பட்டுள்ள போதும், பல மறைமுகமான பணப் பரிமாற்றங்கள், அரசியல் அழுத்தங்கள் காரணமாக நீதியான விசாரணையில் தலையீடு ஏற்பட்டு விடுமோ என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாங்கள் இப்போராட்டத்தை நடத்துவதற்கு தள்ளப்பட்டுள்ளோம். 

ஆகவே, இச்சம்பவத்துடன் தொடர்புடைய கொலையாளிகள் தப்பிச் செல்லக்கூடாது என்பதாலும், நீதித்துறையில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பொய்க்கக்கூடாது என்பதாலும் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபருக்கும் நாம் மகஜரை அனுப்பியுள்ளோம்´ என்றார். 

கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 
Disqus Comments