யானை வரும் பின்னே மணிஓசை
வரும் முன்னே என்பதுபோல, தேர்தல் ஒன்றுக்கான சாத்தியப்பாடுகள் தென்படுகின்ற
போதெல்லாம் வில்பத்து பிரச்சினை மேலெழுகின்றது என்ற கருத்து பலரிடம்
காணப்படுகின்றது.
கடந்த பொதுத்தேர்தலுக்கு
முன்பும் இந்த பிரச்சினை ஊடகங்களில் தலைப்பு செய்தியாக காணப்பட்டதும் தேர்தலுக்கு
பின்பு இது கிடப்பில் போடப்பட்டதும் ரகசியமான விடயமல்ல. அதேபோல் மீண்டும் இந்த
பிரச்சினை சூடுபிடித்துள்ளதனால் விரைவில் தேர்தல் ஒன்று வருவதற்கான சாத்தியம்
காணப்படுவதாக கருதப்படுகின்றது.
அதிகமான மிருகங்கள்
வாழுகின்ற ஒரு தேசிய சரணாலயமாக காணப்படுவதுடன், இது புத்தளம், அனுராதபுரம் ஆகிய இரு
மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக, அனுராதபுரம் நகரிலிருந்து மேற்கு பக்கமாக 30km தூரத்திலும், புத்தளம் நகரிலிருந்து வடக்கு நோக்கி 26km தூரத்திலும் ஒரு தேசிய
சரணாலயமாக இந்த வில்பத்து காணப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தினதும்,
புத்தளம் மாவட்டத்தினது எல்லையாக ”உப்பாறு” காணப்படுவதுடன், வில்பத்து தேசிய
சரணாலயத்தின் ஒரு இஞ்சி நிலமேனும் வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தினுள்
உள்ளடங்கப்படவில்லை. அதாவது வடமத்திய மற்றும் வடமேல் மாகானங்களுக்குள் வில்பத்து
சரணாலயம் அமைந்துள்ளது என்பதே இதன் பொருளாகும்.
விடுதலைப் புலிகளினால்
வெளியேற்றபடுவதற்கு முன்பு வில்பத்துவை அண்மித்த மன்னார் மாவட்டத்தின் முசலி
பிரதேசசபை எல்லைக்குள் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் ஓலை குடிசைகளிலும், களிமண் வீடுகளிலும்
வாழ்ந்து வந்ததனால் காலபோக்கில் அவைகள் அழிந்து வில்பத்துவுடன் சேர்ந்த தொடர்
காடுகளாக அப்பிரதேசம் காணப்பட்டது.
யுத்தம் முடிவடைந்ததன்
பின்பு அப்பிரதேசத்தில் மரங்கள் வெட்டப்பட்டு காடுகள் அழிக்கப்படுவது ஒரு
சர்ச்சைக்குரிய பிரச்சினையாக காணப்பட்டதனால், இதனை கட்டுப்படுத்தும்பொருட்டு முசலி
பிரதேச சபைக்கு உட்பட்டதும், வில்பத்து தேசிய சரனாலயத்துக்கு அண்மித்த
பிரதேசங்களான மரிச்சிக்கட்டி, பாலைக்குழி ஆகிய முஸ்லிம் கிராமங்களின் சில
பிரதேசங்கள் வில்பத்து தேசிய சரனாலயங்களுக்கு சொந்தமானது என்று 2012 இல் அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின்
குறித்த இரண்டு முஸ்லிம் கிராமங்களின் சில பிரதேசங்களை வில்பத்து தேசிய
சரணாலயத்துடன் 2012 இல் இணைக்கப்பட்டதாலேயே அது வில்பத்து பிரதேசம்
என்று இன்று உரிமை கொண்டாடப்படுகின்றது.
மகிந்தவிடமிருந்த
செல்வாக்கை பயன்படுத்தி 2012இல் இந்த வர்த்தமானி
அறிவிப்பை தடுத்திருந்தால் அல்லது ரத்து செய்யவைத்திருந்தால் இன்று இந்த பிரச்சினை
இருந்திருக்காது. அதாவது முஸ்லிம் பிரதேசங்களை வில்பத்துக்குரிய பிரதேசமாகவோ,
அல்லது அங்கு காடுகள் அழிக்கப்படுவதாகவோ யாராலும் பேசமுடியாதிருந்திருக்கும்.
மகிந்த ராஜபக்ஸ மூலமாத்தான்
அதனை செய்ய முடியாமல் போனாலும், இன்றைய ஜனாதிபதியுடன் செய்துகொண்ட தேர்தல்
ஒப்பந்தத்திலாவது வில்பத்து பிரச்சினையை ஒரு நிபந்தனையாக கோரி இருக்கலாம். அதாவது
தனக்கு அமைச்சர் பதவியும் இதர சலுகைகளும் வேண்டும் என்று கோரிக்கை வைக்கும்போது 2012 இன் வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு நிபந்தனை வைத்திருந்தால் இந்த
பிரச்சினை என்றோ தீர்க்கப்பட்டிருக்கும்.
அத்துடன் அண்மையில் சில
முஸ்லிம் தலைவர்கள் ஒன்று சேர்ந்து வில்பத்து பிரச்சினைகள் பற்றி
பத்திரிகையாளர்கள் மாநாடு நடாத்தினார்கள். அதாவது மக்களின் பிரச்சினைகளை மக்களிடமே
முறையிட்டார்கள். இதனால் மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கபோவதில்லை. மாறாக
அமைதியாக இருக்கின்ற ஒட்டுமொத்த சிங்கள இனவாதிகளையும் தட்டி எழுப்புகின்ற தந்திரோபாயமாகவே
அந்த பத்திரிகையாளர் மாநாடு கருதப்படுகின்றது.
இந்த பத்திரிகையாளர்
மாநாடானது பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்பதற்கான ஒரு முயற்சி அல்ல மாறாக மீண்டு இந்த
பிரச்சினையை பத்தவைத்து அதில் அரசியல் ஆதாயம் அடைவதற்கான முயற்சியாகவே பார்க்கப்படுகின்றது.
இதயசுத்தியுடன் வில்பத்து
பிரச்சினையை தீர்க்க நினைத்தால் அதனை என்றோ தீர்த்திருக்க முடியும். அதாவது இங்கே
பத்திரிகையாளர்கள் மாநாட்டுக்காக ஒன்றுகூடிய எமது முஸ்லிம் தலைவர்கள் அனைவரும்
ஒன்று சேர்ந்து ஜனாதிபதியையும், பிரதமரையும் மூடிய அறைக்குள் சந்தித்து 2012 ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலை ரத்துசெய்ய அழுத்தம் வழங்கியிருந்தால் இந்த
பிரச்சினை எப்போவோ நிரந்தரமாக தீர்க்கப்பட்டிருக்கும்.
எனவே சிங்கள இனவாதிகள்
மலிந்துகிடக்கின்ற இந்த நாட்டில் சிறுபான்மையினர்களான நாங்கள் சில பிரச்சனைகளை
ஆர்ப்பாட்டமின்றி மூடிய அறைக்குள் அரசியல் அதிகாரம் உள்ளவர்களைக்கொண்டு மிகவும்
சானாக்கியமாக அணுகுவதன் மூலமே தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். இல்லாதுபோனால்
இறுதிவரைக்கு அது தீர்க்கமுடியாத பிரச்சினையாக விஸ்வரூபமெடுக்கும் என்பதில்
மாற்றுக்கருத்தில்லை. இதனால் பாதிக்கப்படுவது அரசியல்வாதிகளல்ல அப்பாவி மக்களேயாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது