Sunday, January 15, 2017

புதிய புத்தளம் என்னும் தலைப்பில் பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் ஹக்கீம்

​புத்தளம் முன்னாள் நகரபிதா கே.ஏ. பாயிஸ் முன்னெடுத்துவரும் “புதிய புத்தளம்" நகர அபிவிருத்தி திட்டத்தின்கீழ் புத்தளம் நகரை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

"புதிய புத்தளம்" அபிவிருத்தி தொடர்பாக விளக்கமளிக்கும் கூட்டம் புத்தளம் பொது நூலகத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் பூர்த்தியாகாத நிலையிலுள்ள நகர மண்டப அரங்கு, கொழும்பு முகத்திடல் மற்றும் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள அல்பா நவீன சந்தை தொகுதி, நெடுங்குளம் உடற்பயிற்சி மற்றும் களியாட்ட பிரதேசம், மணல்குன்று விளையாட்டு மைதானம், முள்ளிபுரம் விளையாட்டு மைதானம் என்பவற்றை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அத்துடன், புத்தளம் நியூ 6 விளையாட்டுக் கழகம் மற்றும் லிவர்பூர் விளையாட்டுக் கழகம் என்பன இணைந்து விளையாடிவரும் உதைபந்தாட்ட மைதானத்துக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அடிக்கல் நாட்டிவைத்தார். இந்த விளையாட்டு மைதானத்தை தனது அமைச்சின் மூலம் வருட இறுதிக்குள் பூரணமாக நிர்மாணித்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலி, புத்தளம் முன்னாள் நகரபிதா கே.ஏ. பாயிஸ், வடமேல் மாகாணசபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ், வட மாகாணசபை உறுப்பினர் எச்.எம். ரயீஸ், உயர்பீட உறுப்பினர்களான அன்வர், ஜௌபர் மரிக்கார் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.





Disqus Comments