Wednesday, January 4, 2017

ஆலிம்களுக்கென்று தனித்த ஆடை முறை ஒன்று உண்டா?

~அ(z)ஸ்ஹான் ஹனீபா~ இஸ்லாம் மௌலவிகளுக்கென்று தனித்த ஆடையை அறிமுகப்படுத்தவில்லை, மௌலவிகளும் ஏனையோரைப் போன்று இஸ்லாத்தின் வரையறைகளுக்குட்பட்ட வகையில் சாதாரண ஆடைகளை அணிவதற்கு முற்றிலும் தகுதியானவர்கள் தான்.

கிறிஸ்தவ மத பாதிரிமார்களும் அதன் கன்னியஸ்திரிகளும் தங்களுக்கென ஒருவிதமான நீண்ட ஆடையை தேர்வு செய்து அதனை அணிகின்றனர். அவ்வாறே இந்து மத சாமிகளும், பௌத்த மத தேரர்களும், காவி நிற துணிகளை போர்த்துவதை வழக்காக கொண்டுள்ளனர். இவை அனைத்தும் இவர்களே தமக்குத் தாமே ஏற்படுத்திய ஆடை முறைமைகளாகும். இவ்வாறு இஸ்லாமிய மார்க்கத்தை போதிக்கும் ஆலிம்களும் குறித்த ஆடை முறையை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்று நிபந்தனையிடுவது நப்பாசை கொள்வது மடத்தனம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இஸ்லாம் ஆடையிலும் துறவறத்தை கண்டிக்கின்றது. மௌலவிமார்கள் குறித்த இந்தியா, பாகிஸ்தான் நாடுகளது கட்டை (பாய்) ஜுப்பாக்கள், அல்லது அரபு நாடுகளது நீண்ட ஜுப்பாக்களை அணியத்தான் வேண்டும் இல்லையேல் அவர்கள் ஆலிம்கள் இல்லை என்ற வாதமும் ஒருசிலரிடத்தில் நிலைத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. உண்மையில் இவ்வாதம் முற்றிலும் தவறாகும். நபியவர்களது ஆடை முறைகளை வர்ணித்த ஸஹாபாக்கள் யாரும் நபியவர்கள் மார்க்கத் தலைவர் அல்லது போதகர் என்ற வகையில் தனித்துவமான ஆடைப் பழக்கத்தை கொண்டிருந்தார்கள் என்று வர்ணிக்கவில்லை என்பதை இங்கு குறித்துக் காட்டுவது அவசியமாகும். அல்குர்ஆன் "இறையச்சத்தின் ஆடையே சிறந்தது" என்று கூறுகிறதே தவிர இன்ன ஆடை தான் பொருத்தம் என்று வரையறுக்கவில்லை. இந்த வசனத்தை தவறாக விளங்கிய சிலர் ஜுப்பா மட்டுமே "தக்வாவின் ஆடை" என்று ஆங்காங்கே பிரஸ்தாபிப்பதை காண முடிகின்றது. ஆதலால் தான் ஒரு சில பொதுமக்களும் இக்கருத்தை கொண்டிருக்கிறார்களோ என்று யோசிக்கத் தோன்றுகிறது.

ஆலிம்கள் தமக்கு எவற்றை இஸ்லாமிய வரையறைக்குள் உகந்ததாக, கௌரவமாக கருதுகிறார்களோ அவற்றை அணிந்து கொள்வதற்கு பூரண சுதந்திரம் கொண்டவர்கள் என்பதை நாம் எமக்குள் ஆழமாக பதித்துக்கொள்வது உத்தமமாகும்.

ஆலிம்கள் ஜுப்பா அணிந்தே ஆகவேண்டும் என்று வாதாடுவோர் முதலில் ஆலிம் அல்லாதவர்களை ஜுப்பாக்கள் அணிவதை தவிர்க்குமாறு கட்டளையிடுவதே அவர்களின் வாதப்படி பொருத்தமாகும். அத்தோடு ஏனைய நாடுகளது தேசிய ஆடைகளை கட்டாயப்படுத்துவதும் மடத்தனத்தின் உச்சகட்டமாகும்.

ஆக மேற்குறித்த ஆடை கலாசாரத்திற்கு ஆலிம்கள் அடிமைப்படுவதை பொதுமக்கள் நிபந்தனையாக இடுவதை தவிர்த்து ஆலிம்கள் அவ்ரத்தை மறைக்கும் வகையில் தமது ஆடைகளை தேர்வு செய்வதில் சுதந்திமான ஓர் எண்ணப்பாட்டை தோற்றுவிப்பதோடு அவர்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அடக்குமுறை அனைத்து கலாசாரத்திலிருத்தும் அவர்களை விடுவிக்க முயற்சிப்போம்.

நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியா புரம்
Disqus Comments