Monday, January 30, 2017

பலகாரங்கள் தயார் செய்ய உதவிசெய்யும் பேஸ்புக் உரிமையாளர் - ஆனால் எம்மவர்கள் நிலை!


படம் மார்க்கின் முகநூல் பக்கத்திலிலருந்து
உலகில் பிரசித்திபெற்ற சமூக வலைத்தளமான முகநூல்-Facebook ஸ்தாபகரும், உரிமையாளருமான "மார்க் ஸுகர்பேக்" அதிக வேலைப் பளுவிலும் மனைவியை மதித்து குடும்ப வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து அவரலகளுக்கு வரவிருக்கும் பண்டிகையையொட்டி பலகாரங்கள் தயாரிப்பதில் ஈடுபடும் தனது மனைவிக்கு  உதவியாக இருந்து ஒத்துழைப்பு வழங்குவதை இங்கு காணலாம்.


இது, மாற்றுமத ஒருவரும் இளம் வயதுடையவருமான மார்க், பல வேலைகளுக்கு மத்தியில் மனைவிக்கு தனது நேரத்தை ஒதுக்கி இல்லறத்தை நல்லறமாக ஆக்க எடுக்கும் முயற்சியானது மெச்சத்தக்கதாகும்.



ஆனால் இஸ்லாத்தில் பிறந்து அதனை சரிவர கற்று விளங்கியோரில் அநேகர் எம்மத்தியில் மனைவியை அடிமை போன்று நடாத்துவதும், பெண் என்றால் எமக்கு பணிவிடை செய்யவே படைக்கப்பட்டுள்ளாள், அவள் வீட்டு வேலைக்காரி என பல எண்ணப்பாடுகளுடன் அவளை கீழ்த்தரமாக நடாத்துவதோடு செயற்களால் துன்புறுத்துவது மாத்திரமன்றி நச்சு வார்த்தைகளாலும் அப்பெண்ணை துன்புறுத்தி கூனிக் குறுக வைத்து மூலையில் ஒதுக்கி அடக்கியொடுக்கி அடிமைப்படுத்துவதை சமூக மட்டத்தில் நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.



மனைவிக்கு வீட்டு வேலைகளில் ஒத்தாசையாக இருப்பதை கேவலமாகவும் இழிவாகவும் கருதும் எத்தனையோ பண்பாடற்ற கணவர்மார்களும் எம்மதியில் இருக்கத்தான் செய்கின்றனர்!. தமது குழந்தைகளை தூக்குவதை தாலாட்டுவதை, தாம் உணவூட்டுவதை, ஏன் செல்லமாக கொஞ்சுவதை கூட அறுவறுப்பாக கருதும் மனமற்ற கல்லுள்ளம் கொண்ட கணவன் என்ற போர்வையில் ஜடமாக சுற்றும் ஜீவன்களும் இருக்கத்தான் செய்கின்றனர்!. இன்னும் ஒரு சாரார் குடும்ப வாழ்வு என்பது உடலுறவுடன் மாத்திரம் தொடர்பானது என்று அதனை ஒரு வட்டத்திற்குள் உட்படுத்தி விளங்கி உடலுறவுக்கு மாத்திரம் மனைவியை பயன்படுத்திவிட்டு ஏனைய நேரங்களில் அவளை ஏறெடுத்தும் பார்க்காது புறக்கணித்து மிருகங்களைப் போல் நடாத்தும் மிருகத்தனமானவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்!. வீட்டு வேலைகள், காரியங்கள் அனைத்தும் மனைவிக்குரியவை என நாம் ஏற்படுத்திக்கொண்ட சிந்தனையால், எண்ணப்பாட்டால் வந்த விளைவே இவற்றிற்குக் காரணமாகும்.



இஸ்லாம் ஆணுக்குத் தான் அனைத்தையும் கட்டாயப்படுத்தியிருக்கின்றது அத்தோடு நபியவர்களும் தனது மனைவியருக்கு வீட்டு வேலைகளில் ஒத்துழைப்பாகவும் அவர்களுக்கு பணிவிடை செய்யும் பழக்கமுள்ளவர்களாகவும், தனது வேலைகளை தானே செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்ற ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் எமக்கு, முக்கியமாக தரக்குறைவாக நடக்கும் கணவன்மார்களுக்கு பாரிய படிப்பினையாகவும் முன்மாதிரியாகவும் அமைகின்றது.



இதே வேளை, மனைவியரை, பெண்களை இஸ்லாம் கூறிய முறைப்படி புரிந்துணர்வுடன் மதித்து வீட்டு வேலைகளில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருந்து உதவி செய்யும் கணவர்மார்களும் எம்மதியில்  இருக்கின்றனர் என்பதும் மறுப்பதற்கில்லை. அத்தோடு மனைவியரும் எம்மைப் போன்ற மனித இனம், அவர்களுக்கும் எம்மைப் போன்ற உணர்வுகள், சுக துக்கங்கள் இருக்கின்றன என்பதை விளங்கி அவர்களது மனம் நோகாத வகையில் தனது தாய், மகள்களைப் போன்று அன்பாக பண்பாக நடாத்தும் கணவர்மார்களும் எமது சமூகத்தில் இருக்கின்றனர் என்பதும் குறித்துக் காட்டப்படவேண்டிய அம்சமாகும்.



ஆக, பெண்களை அடிமைகளாக நடாத்தாது அவர்களை மதித்து உணர்வுகளைப் பேணி இரக்கமுள்ளவர்களாக நபியின் குடும்ப வாழ்க்கை முறையை  பின்பற்றி அனைத்திலும் ஒத்துழைப்பாக இருந்து அவர்களது சுக துக்கங்களில், நலவு கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுக்கும் நல்லவர்களாக எம்மை வல்லவன் அல்லாஹ் ஆக்கியருள்வானாக! ஆமீன்



நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியா புரம்- பாலாவி
Disqus Comments