Monday, January 16, 2017

வரட்சியின பிடியில் இலங்கை - நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

வரட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் 149,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரட்சி காரணமாக யாழ். மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய அனர்த்த கேந்திர நிலையம் குறிப்பிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 24,324 குடும்பங்களைச் சேர்ந்த 85,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.சங்கானை பிரதேச செயலாளர் பிரிவில் 8200 குடும்பங்களை சேர்ந்த 31,300 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் 10,235 குடும்பங்களைச் சேர்ந்த 34,765 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த கேந்திர நிலையம் குறிப்பிட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டமே வரட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் திருகோணமலையில் 1381 பேர் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் 674 குடும்பங்களைச் சேர்ந்த 2482 பேர் வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளையில் 995 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 8647 பேரும் வரட்சி காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தேசிய அனர்த்த கேந்திர நிலையம் குறிப்பிட்டுள்ளது.
வரட்சி காரணமாக குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், விவசாயத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக வடக்கு கிழக்கு விவசாயிகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்பார்த்த நீர் கிடைக்காமையினால் பல ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமது ஜீவனோபாயத்திற்காக பயிற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் போதிய நீர் கிடைக்காமையினால் தற்போது செய்வதறியாது தவிக்கின்றனர்.
கடும் வரட்சி காரணமாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடைந்து காணப்படுகின்றன.
இரணைமடு குளத்தில் இருந்தும் எதிர்பார்த்த நீர் கிடைக்காமையினாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் அதனை அண்மித்த பல குளங்களும் வற்றியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
வவுனியா மாவட்டத்திலும் கடும் வரட்சி காரணமாக விவசாய செய்கை முற்றாக கைவிடப்பட்டுள்ள நிலையில் தோட்டச்செய்கையும் கைவிடப்பட்டுள்ளது.
இதேவேளை கிணறுகளில் நீர் இன்மையால் எஞ்சியுள்ள பயிர்களுக்கு நீர் இறைப்பதற்கும் விவசாயிகள் பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றர்.
இந்த நிலையில் வரட்சியினால் சேதமாகியுள்ள பயிர்களுக்கு நட்டஈட்டை வழங்குவதற்கு விவசாயத் திணைக்ளம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கான வயல் நிலங்கள் கடும் வரட்சியினால் அழிவடைந்துள்ளன.
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 10,000 ஏக்கர் வயல் நிலங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தாம் ஜீவனோபாயமாக மேற்கொண்டுவரும் விவசாய செய்கை முன்னொருபோதும் இல்லாதவாறு இம்முறை பாதிக்கப்பட்டுள்ளமையினால் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.

Disqus Comments