இயற்கை அன்னையின் தவப்பிள்ளை தான் இலங்கை நாடென்றால் அது மிகையாகாது. அத்தனை அழகும் எம் நாடு. வளம் கொஞ்சும் எழில் நாடு. 'பூட்ஸ்' கால்களுக்கிடையே சிக்கியிருந்த நாம், இப்போது சுதந்திரக்காற்றினை சுவாசிக்கின்றோம் என்றால் நாம் பாக்கியசாலிகளே. அறுபத்தி எட்டு வருடங்களாக அந்நியப்படுத்தல்களிலிருந்து தூரமாகி இருக்கின்றோம்.
இலங்கை மக்களினால் எமக்கு சுயாட்சி வேண்டும், எமது ஆள்புலத்தினை நாமாகவே எமக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வுடன் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்கின்ற அடிப்படையில், பல கோரிக்கைகள் பிரித்தானியர்களிடத்தில் எழுப்பியிருந்தமைக்கு அமைவாகவும், அன்று காணப்படவந்த உலக நெருக்கடித் தன்மைகளினாலும், ஆசிய நாடுகளினை காலணித்துவத்திற்கு உட்படுத்தியிருந்த பிரித்தானியா கைவிடவேண்டி இருந்தது. மேலும் அத்தகைய நாடுகளிற்கு சுதந்திரம் வழங்கி வெளியேறவேண்டிய நிர்ப்பந்தத்திலும் காணப்பட்டது. இதன் தொடர்சியில் பிரித்தானியா இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு மாசி மாதம் 04 ஆம் திகதி சுதந்திரத்தினை வழங்கியிருந்தமையானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காலாதி காலமாக பெப்ரவரி 04 ஆம் திகதி இலங்கையில் வருடந்தோறும் விழா எடுக்கும் நடைமுறைகளும் செயற்பாடுகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமையும் 68 வருடங்களைக் கடந்ததுடன் இன்று 69 வருடத்தினில் பயணிக்கின்ற விடயமும் இலங்கை வாழ் அனைத்து மக்களையும் மகிழ்விக்கின்ற விடயமாகும். அவ்வாறே தற்போதைய அரசாங்கத்தினால் 2016 இல் சுதந்திரதின விழாவின் போது தமிழ் மொழியினால் தேசியகீதம் இசைப்பதற்கு அனுமதி வழங்கியமை வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும். எமது நாடு, எமது மக்கள், ஐக்கியமான இலங்கை என்கின்ற சொற்பிரயோகங்கள் நாளுக்கு நாள் ஆட்சியாளர்களினால் பேசப்படுவதுடன் மக்களிடையில் ஒரு தாயின் பிள்ளைகள் என்கின்ற மனோநிலையினையும் உருவாக்கி வருவது தேசியத்திற்கு சிறப்பினை ஏற்படுத்துகின்றது எனலாம்.
இருந்தபோதிலும், இப்போது நாம் சுதந்திரமாக அந்நியப்பட்டுக்கொண்டு இருக்கின்றோம். அதாவது 69 வருடங்களை காணும் இலங்கையின் சுதந்திர தினத்தில், தமிழ் பேசும் சிறுபான்மையினரது சுதந்திரத்தினை அனுபவிக்கும் நிலை என்பது இன்றளவில் கேள்விக்குரிய ஒன்றாகவே இருந்து வருகின்றதனை அடையாளம் காணமுடிகின்றது. முப்பது வருட கால யுத்தமும், யுத்தம் ஏற்படுவதற்கான காரணிகளில் உள்ளடங்கியிருக்கும் சிறுபான்மையினரது ஏக்கங்களும், எதிர்பார்ப்புக்களும் சிங்களப் பெரும்பாண்மையினால் புறக்கணிக்கப்படுகின்ற அவர்களின் நலன்கள் மற்றும் ஐக்கிய இலங்கையில் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டு நடமாடும் ஜடங்களைப் போன்று, தமிழர்கள் யுத்தத்தின் கோர அழிவுகளினால் இன்று முடமாக்கப்பட்டு உறவுகளை யுத்த களத்திலும் புணர்வாழ்வு மையங்கள் எனும் பெயரில் இராணுவ முகாம்களிலும் தொலைத்துள்ள நிலையில், இன்று முன்னெடுக்கப்படுகின்ற சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் வெறும் போலி நாடகமே.
இவை இவ்வாறு ஒருபுறம் இருக்க, ஒரு நாட்டில் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பிற்பாடான சமாதான அபிவிருத்தி செயன்முறைகளானது பல அபிவிருத்தி விடயங்களினைக் கொண்டுள்ளது. அதில் அரசியல் அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, சமூக மேம்பாடுகள், மனித பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விடயங்கள் என்கின்றவாறாக காணப்படும். இன்றைய அரசாங்கங்கள் அத்தகைய செயன்முறைகளை வட கிழக்கில் நிறைவேற்றியுள்ளது என்பதற்கான சான்றுகளும் நிரூபித்தல்களும் இல்லாமலும் இல்லை. இருப்பினும் அவை முழுமையாக சிறுபான்மையோரை திருப்திப்படுத்துகின்றனவா? என்பது சர்ச்சைக்குரிய விடயமுமாகும்.
இலங்கையின் புதிய அரசியல் யாப்பு கொண்டுவரப்படுவதற்காக மக்களிடத்தில் கருத்துக்கணிப்புக்கள் இடம் பெற்றிருப்பினும் பேரினவாதத் தீர்வுத் திட்டமானது, சிறுபான்மைக்கு போதிய திருப்திப்படுத்தல்களை வழங்குமா? என்பதிலும் ஐயப்பாடுகளையே மக்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது. அடுத்து ஆசியாவின் முதன்மையானதும் தமிழர்களின் பூர்வீக வரலாறு பேசும் பொக்கிஷமான யாழ் நூலகம் எரிக்கப்பட்டதுடன் இன்று சிறுபான்மைப்பகுதிகளில் சிங்கள பேரினவாதிகள் தமது இருப்பினை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
மீள் குடியேற்ற விடயங்களில் தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் பிரதேசங்கள் சிங்களக் குடியேற்றங்களினால் மீள் நிரப்பப்பட்டு பேரினவாத சக்திகளினால் சுவீகரிக்கப்பட்டிருப்பதும் அவர்களது வாழ்வாதாரத்தினை சூறையாடும் போக்கும் வெந்த புண்ணில் வேல் பாச்சுவதனைப் போன்றாகிவிட்டது. இந்நிலையில் வடகிழக்கு பகுதிகளில் மக்களின் காணிகள் அரசாங்கத்தினால் முழுமையாக விடுவிக்கப்படாத போக்குகள் காணப்படுவதுடன் அவர்களது ஆள்புலத்தில் திட்டமிட்ட வகையிலான பௌத்த விகாரைகளின் உருவாக்கமும் , பௌத்த மதவாதிகளின் ஆக்கிரமிப்புக்களும், வன்முறையினைத் தூண்டக்கூடிய இனப்பாரபட்சம் மிக்க கருத்துக்களும், செயற்பாடுகளும் இலங்கையில் இனங்களுக்ககிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் சவாலினை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய பின்னணியில் பெரும்பான்மை இனங்களுக்கிடையில் சிறுபான்மை மீதான மதிப்பீட்டு நிலைகளானது ஏற்றத்தாழ்விற்குறிய ஒன்றாக மாறிவருகின்றது எனலாம்.
இலங்கையில்; பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட போதிலும், அரசாங்கமானது தனது இராணுவப் பிரசன்னத்தை முழுமையாக வடகிழக்கில் இருந்து நீக்காமையானது மேலும் சிறுபான்மை மக்களின் சுயாதீனத்தை கூறுபோட்டுள்ளது. இன்றைய காலப்பகுதியில் பொது நிர்வாக விடயங்களில் இத்தகைய மறைமுகமான இராணுவத் தலையீடுகள் இல்லாமலுமில்லை. அந்தவகையில் அண்மையில் நடந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் இருவரின் கொலைச் சம்பவத்திலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய காவற்துறையின் செயற்பாடுகளானது வேலியே பயிரை மேயும் கதையாகிவிட்டது.
இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களிலும்; மூவின மாணவர்களை உள்வாங்கும் அரசின் செயற்பாடானது நல்லிணக்கம் சார்ந்த முயற்சியாக இருப்பதுடன் அதுவே பெரும்பான்மையினரது எதிர்காலம் குறித்த கல்வி தொடர்பிலும் இருப்பு நிலையிலும் செல்வாக்கு செலுத்தி வருகின்றது. குறிப்பாக மாணவர்களுக்கிடையிலான மோதல்களில் இனவாதங்கள் பின்புலமாக தூண்டப்படுகின்றன. சிங்கள - தமிழ் மாணவர்களுக்கிடையிலான மோதல்கள், சிங்கள – முஸ்லீம் மாணவர்களுக்கிடையிலான மோதல்கள் என்கின்றவாறாக இன்றைய காலப்பகுதியில் சிறுபான்மையினர் மீதான பிளவுகள் தோற்றம் பெற வருவதனை அவதானிக்க முடிகின்றது. அத்துடன் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவதில் காட்டப்படுகின்ற இன ரீதியான பாரபட்சங்களும் , தொழிலின்றி இளம் தலைமுறையினரை பொருளாதார நெருக்கடிக்கு உட்படுத்தியிருப்பதுடன், சொந்த நாட்டில் கிடைக்கப் பெற்ற கல்வியும் பட்டதாரிப் பட்டமும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கூலித்தொழில் தேடும் நிலையினையே உருவாக்கியுள்ளது என்றால் அது உண்மையே.
இவ்வாறாக சிறுபான்மையினர் மீதான அரசியல் சமூக பொருளாதார விடயங்களில் காணப்படும் பாரபட்ச போக்குகளும் அநீதிகளும் இலங்கையில் காலாதிகாலமாக கொண்டாடப்பட்டு வருகின்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் சிறுபான்மையினரை பங்குதாரர்களின்றி பார்வையாளராக்கும் நிலைமையினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
இந்த எழுத்துக்களுக்கு காரணம் எம் தாய்நாடு தந்த சுதந்திரமும் வசதியுமன்றி வேறில்லை. ஒரு தாய் நாட்டில் ஊர்ப் பிள்ளைகளாக தூரத்தில் நிற்காமல் ஒரு வீட்டுப் பிள்ளைகளாக இன, மத, மொழி, பேதம் களைந்து, 'இலங்கையர்கள்' எனும் நாமம் சூடி, சுதந்திரத்தை சுரந்திரக் வேண்டும் என்பதே இவ்வெழுத்துக்களின் நீண்ட பிரார்த்தனையாகும்.
வாழ்க எம் நாடு.
எழுத்தாக்கம்✍🏾
*ஜே.ஜெனற் நிஷானி*
அரசியல் சிறப்புத்துறை
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.
