Thursday, February 16, 2017

ஆதாரபூர்வமாக அம்பலமாகியுள்ள வில்பத்து நாடகம். (படங்கள் இணைப்பு)

அண்மையில் “இலங்கையை பாதுகாக்க” என்னும் தலைப்பில் “எங்கள் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான கூட்டணி” என்னும் அமைப்பினரின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்கள் மாநாடு நடாத்தப்பட்டது.  

அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் வில்பத்து காட்டினை அழிப்பதாகவும், அதற்கு எதிராக இயற்கையை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு எதிராக சிங்களவர்கள் கிளர்ந்தெழுகின்றார்கள் என்ற தோற்றப்பாட்டுடன் இந்த ஊடகவியலாளர் மாநாடு நடாத்தப்பட்டது. 

இதன் நிறைவாக அங்கு வருகை தந்தவர்களுக்கு பென்ட்ரைவ் வழங்கப்பட்டது. அந்த பென்ட்ரைவின் மேற்பரப்பில் குறித்த ஏற்பாடுகளை செய்திருந்த “எங்கள் இயற்கை பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான கூட்டணி” யின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஸ்ட்ரிக்கர் ஒட்டபட்டிருந்தது. 

ஏற்பாட்டு அமைப்பினரின் அனுசரணையில்தான் இந்த பென்ட்ரைவும் வழங்கபடுகிறது என்றுதான் எல்லோரும் நம்பியிருந்தார்கள். ஆனால் பின்னாட்களில் குறித்த பென்ட்ரைவின் மேல்பரப்பில் ஒட்டப்பட்டிருந்த ஸ்ட்ரிக்கரை உரித்துப்பார்த்த பின்புதான் அதிர்ச்சியும், ஆச்சரியமும் காணப்பட்டது. 

அதாவது அமைச்சர் ரிசாத் பதியுதீனின் அமைச்சின் கீழ் இயங்குகின்ற நுகர்வோர் அதிகார சபையின் இலட்சினை இந்த பென்ட்ரைவ்களில் பொறிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 

அமைச்சர் ரிசாத்துக்கு எதிராக சிங்களவர்களினால் நடாத்தப்பட்ட ஊடக மாநாட்டில் வழங்கப்பட்ட பென்ட்ரைவில் அவரது அமைச்சின்கீழ் இருக்கின்ற நுகர்வோர் அதிகாரசபையின் இலட்சினையை மறைத்து ஏற்பாட்டாளர்களின் ஸ்ரிக்கர்கள் ஏன் ஒட்டப்பட வேண்டும்? 

அப்படியென்றால் முஸ்லிம் மக்கள் மத்தியில் அனுதாபத்தினை பெறும் பொருட்டு தனக்கு எதிராக மாநாடு நடாத்துமாறு அமைச்சரே முழு அனுசரணையையும் வழங்கியுள்ளாரா?        

குறித்த வில்பத்து பிரதேசங்களுக்கு சென்று அதனை பார்வையிட்டவர்கள் அனைவரும் அங்கு காடுகள் அழிக்கப்படவில்லை என்றே கூறுகின்றார்கள். அத்தோடு ஊடகங்களில் பேசப்படுகின்ற அளவுக்கு வில்பத்து பிரதேசங்களுக்கு நேரடியாக சென்றுபார்த்தால் எந்தவிதமான ஒரு தோற்றப்பாடுகளும் காணப்படவில்லை. அப்படியென்றால் வில்பத்து பற்றிய வீண் பிரச்சினைகளும், பதட்டங்களும், ஊடக பிரச்சாரங்களும் எதற்கு?


தேர்தல் ஒன்று வருவதற்கான சூழ்நிலைகள் தென்படுகின்ற போதெல்லாம் இப்படியான வில்பத்து பற்றிய பிரச்சினைகள் வேண்டுமென்று உருவாக்கப்பட்டு வருகின்றது என்பது அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாகும். அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த ஆதாரம் கிடைத்துள்ளது. இது உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.
முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 




Disqus Comments