Monday, July 3, 2017

13 நிபந்தனைகளையும் நிறைவேற்ற மேலும் 48 மணிநேரம் அவகாசம் கொடுத்தது சவூதி கூட்டணி.

(-அபூசாலி முகம்மத் சுல்பிகார் -) சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை கடந்த மாதம் (ஜூன்) 5 -ந் தேதி முதல் முறித்துக்கொண்டன.

தீவிரவாதிகளுக்கு மறைமுகமாக பணஉதவி செய்வதாகவும், தங்களது எதிரிநாடான ஈரானுடன் உறவு வைத்திருப்பதாகவும் கூறி இந்த தடை விதிக்கப்பட்டது. அதை கத்தார் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தடை காரணமாக கத்தாரில் இருந்து மேற்கண்ட நாடுகள் தூதர்களை வாபஸ் பெற்றன.

மேலும் கத்தார் விமானங்கள் தங்கள் நாட்டின் வான் எல்லையில் பறக்க தடை விதித்துள்ளன. கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கத்தார் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியில் குவைத் மன்னர் ஈடுபட்டுள்ளார். சவுதி அரேபியாவின் நட்பு நாடுகள் மற்றும் கத்தாருக்கு இடையே சமரசம் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து சவுதி அரேபியாவும், அதன் நட்பு நாடுகளும் கத்தாருக்கு கடந்த 22-ந் தேதி 13 கோரிக்கைகள் விடுத்தன. அதில் எகிப்தில் சகோதரத்துவ கட்சிக்கு வழங்கும் ஆதரவை கத்தார் நிறுத்த வேண்டும். அல்-ஷசீரா டி.வி.யை மூடவேண்டும். ஈரானுடன் ஆன தூதரக உறவை குறைக்க வேண்டும். கத்தாரில் இயங்கும் துருக்கி ராணுவ முகாமை மூடவேண்டும் என்பன போன்றவை முக்கிய கோரிக்கைகளாகும். இவற்றை ஏற்றுக்கொள்ள கத்தாருக்கு 10 நாள் கெடு விதிக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், நேற்றுடன் ‘கெடு’ முடிந்தது. எனவே அதை நீடிக்கும்படி குவைத் அரசு சவுதி அரேபியாவிடம் வலியுறுத்தி இருந்தது. அதை பரிசீலித்த சவுதி அரேபியா மற்றும் நட்பு நாடுகள் கத்தாருக்கு விதிக்கப்பட்ட ‘கெடு’வை மேலும் 48 மணி நேரம் நீடித்து அறிவித்துள்ளது.
Disqus Comments