Thursday, March 28, 2013

“தேசத்துக்க மகுடம்” கண்காட்சியை ஏன் தென்கிழக்கு முஸ்லிம்கள் புறக்கணித்தார்கள்???


தேசத்துக்கு மகுடம்கண்காட்சியைப் பார்ப்பதற்கு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் செல்லாதது குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது. அம்பாறையில்  “தேசத்திற்கு மகுடம்கண்காட்சி கடந்த சனிக்கிழமை மாலை ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தக் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டு  நேற்று புதன்கிழமையுடன் ஐந்து தினங்கள் கடந்த நிலையில், அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்  இந்தக் கண்காட்சியைப் பார்ப்பதற்கு வருகை தராத காரணம் குறித்து கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது.

 இது விடயமாக உயரதிகாரிகள் பலரிடமும் ஆராய்து வருவதாக தெரியவருகின்றது. சாதாரண விடுமுறை தினத்தில் இடம் பெறுகின்ற நிகழ்வுகளைக் கூட பார்ப்பதற்கு பெருமளவில் செல்லும் முஸ்லிம்கள் ஏன்  அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்ததேசத்திற்கு மகுடம்கண்காட்சியைப் பார்ப்பதற்குச் செல்லவில்லை என்று வினா எழுப்பப்படுகின்றது.

தேசத்திற்கு மகுடம்கண்காட்சியை முஸ்லிம்கள் அதிகளவாகக் கண்டுகளிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு தான் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட அம்பாறை மாவட்டத்தில் அது நடத்தப்படும் நிலையில் பெருந்தொகையான முஸ்லிம்கள் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலிருந்து அணிதிரண்டு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் ஏற்பாட்டாளர்களால் எதிர்பார்க்கப்பட்டது போல் முஸ்லிம்கள் இதற்குச் செல்லாதது குறித்து பாரிய கேள்வி எழும்பியுள்ளது.

தேசத்திற்கு மகுடம்கண்காட்சியைப் பார்ப்பதற்கு முஸ்லிம்களுக்கு ஹராம் என அண்மையில் கொழுப்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி விடுத்த அறிக்கை, முஸ்லிம்கள் ஹலால் விவகாரத்தில் அரசு நடந்து கொண்ட விதம், பொதுபலா சேனா எனும் சிங்கள  அமைப்பு முஸ்லிம்களுக்கு செய்து வரும் அநீதிகளை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் உடையை சில இடங்களில் கழற்றுவதற்கு முற்பட்டமை போன்ற காரணங்களால் முஸ்லிம்கள்தேசத்திற்கு மகுடம்கண்காட்சியைப் பார்ப்பதற்கு போகாமலிருப்பதற்கான காரணங்களாக இருக்க முடியுமா? என்றும் வினா எழுப்பப்படுகின்றது.

தேசத்திற்கு மகுடம்கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், திங்கட் கிழமை முஸ்லிம்களுக்கு பௌத்த தீரவிரப்போக்கு அமைப்பான பொதுபலா சேனாவினால் நடத்தப்பட்டு வரும் அநீதியைக் கண்டித்து உணர்வுபூர்வமான ஹர்த்தால் கடையடைப்பும் அம்பாறை மாவட்டத்திலும், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களிலும், வடக்கிலும் அனுஷ்டிக்கப்பட்டன. இதுவும் முஸ்லிம்கள் விழிப்புணர்வுடன் தான் இருக்கின்றார்கள் என்பதை மிக தெள்ளத்  தெளிவாக காட்டுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் பொறுமையுடனும், அமைதியுடனும் சகிப்புத்தன்மையுடனும் நடந்து கொள்ளும் முஸ்லிம்கள், அமைதியாக சில விடயங்களுக்கு எதிர்ப்புக் காட்டி வருகின்றனர் என்பதற்கு நல்ல உதாரணம் தான்தேசத்திற்கு மகுடம்”  கண்காட்சியை பார்க்க செல்லாமைக்கான முக்கிய காரணியாகும்.

பௌத்த தீரவிரப்போக்கு அமைப்பான பொதுபலா சேனா எனும் அமைப்புக்கெதிராக இந்த அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதும் அரசின்  ஆதரவுடனேயே முஸ்லிம்களுக்கெதிரான அநீதி நடவடிக்கைகளை பௌத்த தீரவிரப்போக்கு  அமைப்பான பொதுபலா சேனா செய்து வருகின்றது என்ற விடயமும் முஸ்லிம்களுக்குள் உலாவுகின்றனஇப்படியான நிலையில் அரசு செய்யும் இந்ததேசத்திற்கு மகுடம்கண்காட்சியை ஏன் முஸ்லிம்கள் சென்று பார்க்க வேண்டும் என்ற வினாவும் முஸ்லிம் சமூகத்தால் எழுப்படுகின்றது.

கடந்தகால யுத்தத்தில் இந்த நாட்டு அரச படைக்கு முஸ்லிம்கள் செய்த அளப்பரிய பங்களிப்பை அரசும் இந்த பௌத்த தீரவிரப்போக்கு அமைப்பான பொதுபலா சேனா அமைப்பும் மறந்து செயற்படுகின்றவா? என்ற கேள்வியும் முஸ்லிம்களிடம் எழுந்துள்ளது.

யுத்தத்தில் முஸ்லிம் இராணுவ சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். முஸ்லிம் பொலிஸ்காரர்கள் கொல்லப்பட்டார்கள். ஆயிரக்கணக்கான முஸ்லிம் பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். அத்துடன் முஸ்லிம்கள் அகதிகளாகஅநாதைகளாக பரிதவித்ததையும் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டதையும் இன்னும் தமது சொந்த இடங்களில் கால் வைக்க முடியாமல் பலர் பரிதவிப்பதையும்  முஸ்லிம் சமூகம் ஒரு முறை சுட்டிக்காட்டுகின்றது.

யுத்தத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய காணிகளை இழந்துள்ள முஸ்லிம் சமூகம், தொழுகையில் கூட விடுதலைப் புலிகளின் தாக்குதலில் பலரை இழந்துள்ளது என்பதை வரலாறு நெடுகிலும் மறக்காது என்பது கவனிக்கத்தக்கது.

முஸ்லிம் சமூகம் தனது தாய் நாட்டிற்கு விசுவாசமாக இருந்து வரும் நிலையில் தனது மார்க்க கடமைகளைக் கூட செய்ய முடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளமை குறித்து கவலையுடன் இருக்கும் நிலையில் இந்ததேசத்திற்கு மகுடம்கண்காட்சியை பார்க்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியையும் கேட்கிறது.

ஜெனிவாவில் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முஸ்லிம்கள் நாடுகள் தேவை. மத்தள விமான நிலையத்தில் முதல் விமானமாக  வந்து தரையிரங்குவதற்கு ஹலால் நாட்டு விமானமான எயர் அரேபியா விமானம் தேவை. விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு முஸ்லிம் நாட்டு விமானிகளின் உதவி தேவை. இவ்வாறெல்லாம் முஸ்லிம் நாடுகள் இந்த நாட்டுக்கு உதவுகின்ற போது ஏன் இந்த நாட்டு அரசு முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளிலும், ஏனைய அடிப்படை மார்க்க விடயங்களிலும் கை வைக்க வேண்டும் என்றும் முஸ்லிம் சமூகம் கேட்கின்றது.

இவற்றையெல்லாம் விளங்கிக் கொண்ட  முஸ்லிம் சமூகம் இன்று இந்ததேசத்திற்கு மகுடம்”  கண்காட்சியைப் புறக்கணித்து வருவதை விளங்கிக் கொள்ள முடிகின்றது. கடந்த யுத்தத்தின் போது வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் உட்பட தென்இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகம் துயரடைந்ததுடன் வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு உதவியும் செய்துள்ளது.

தற்போது தென்னிலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்துவருவதுடன்உணர்வு பூர்வான ஹர்த்தாலையும்  அனுஷ்டித்துள்ளதுடன்தேசத்திற்கு மகுடம்”  எனும் அரசால் ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ள கண்காட்சியையும் புறக்கணித்துள்ளார்கள்.


Disqus Comments