இந்தியாவின் ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 24 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
புவனேஸ்வரிலுள்ள எஸ்.யூ.எம். மருத்துவமனையிலேயே குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
மருத்துவமனையின் இரண்டாவது தளத்திலுள்ள அவசர கிசிச்சைப் பிரிவிலுள்ள டயாலிசிஸ் சிகிச்சைக்கான வார்டில் நேற்றிரவு தீ பரவியதால் பாரிய உயிர்ச்சேதம் மற்றும் பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள் அருகிலிருந்த அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவ்வாறு அனுப்பட்டவர்களில் 24 பேர் வரும் வைத்தியசாலைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர்.
பல மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 120 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதால் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீ விபத்திற்கான காரணம் முழுமையான விசாரணைக்கு பின்னர்தான் தெரியும் என்றும் முதல்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ பற்றியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மருத்துவமனை தீ விபத்து ஏற்பட்டமைக்கு காரணம் குறித்து விசாரணை நடத்த தாம் உத்தரவிட்டுள்ளதாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்களின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்துச் செலவுகளையும் தமது அரசு பொறுப்பேற்கும் ஏற்கும் என்றார்.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை குறித்து பிரதமர் மோடியுடன் தாம் பேசியதாகக் கூறிய நவீன் பட்நாயக், தீவிபத்து குறித்து விசாரணை நடத்த மண்டல வருவாய் ஆணையருக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
