Monday, October 17, 2016

மணமகன், மணமகள் தேர்வில் மார்க்கத்தை கணிப்பதில் நெறி பிறழ்வைத் தவிர்ப்போம்


ஒரு சிறந்த குடும்பத்தை உருவாக்குவதில் சிறந்த மணமகன், மணமகள் தேர்வுக்கு பாரிய பங்களிப்பு இருக்கின்றது.  குடும்பம் ஒழுங்கில்லையேல் சமூகம் சீரற்றுவிடும். இவ்வாறு சிறந்த குடும்ப உருவாக்கத்திற்கு வித்திடும் புதுத் தம்பதியனருக்கான தேர்வின் பொழுது அநேகமானோர் கணிக்கும் கணிப்பீடுகளில் மார்க்கம் மற்றும் கல்வி என்பன சரியான முறையில் அமைவது மகிழ்ச்சிகரமான வாழ்விற்கு வழிவகுக்கும்.


குறிப்பாக நடைமுறையற்ற மார்க்கம் படித்தவர்களை நம்பி மார்க்கப்பற்றுள்ளவர்கள் தான் என எண்ணி எம்மில் அதிகமானோர் மணமகன் மற்றும் மணமகளைத் தேர்வு செய்வதில் தவறிழைத்துவிடுகின்றனர்.



மார்க்கம் அறிந்தவர்கள் அனைவரும் மார்க்கப்பற்றோடு அதனை நடைமுறைப்படுத்துபவர்கள் அல்லர்.

அத்தோடு கல்வித்துறையில் பட்டங்கள் பெற்றவர்கள் எல்லோரும் பண்பாடுகள் உள்ளவர்கள் என்றும் கூறமுடியாது. சிலவேளைகளில் கற்றறியாத பாமரன் மிகுந்த நுணுக்கத்தோடும் அழகிய பண்போடும் குடும்பங்களுடன் பழகுவதை காணமுடிகின்றது.



புது மணமகன் மற்றும் மணமகளைத் தேர்வு செய்வதில் நடைமுறையில் மார்க்கத்தை அமுலாக்குபவர்களே மார்க்கம் உள்ளவர்கள் என்று விளங்கிக்கொள்ள வேண்டும். மார்க்கக் கல்வியில் பிரசித்திப்பெற்ற அரபுக் கலாசாலைகள், சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்பதையிட்டு மார்க்கப்பற்றுள்ளவர்கள் என ஒரு போதும் மதிப்பிடமுடியாது. இவ்வாறு மதிப்பிடுவது போலியை நம்பி ஏமாறும் நிலைக்குக் கொண்டுசென்றுவிடும் அத்தோடு இவ்வாறான மதிப்பீடு ஒருவகை மடமையுமாகும். இவ்வாறு பட்டங்களது வெளிநடப்புகளை யூகித்து மக்கள் மன்றத்தில் அதிகமானோர்  தமது பிள்ளைகளுக்கு தரமற்ற விளைவை ஏற்படுத்தும் பொருத்தமற்ற மணமகள், மணமகனைத் தேர்வு செய்து ஆரம்பத்தில் சந்தோச வெள்ளத்தில் மூழ்கி திருமணத்தின் பின்னர் கண்ணீரும் கம்பலையுமாக வாழ்வைக் கழிக்கின்றனர்.



மணமகன், மணமகள் தேர்வு என்பது மிக முக்கியமானதொரு அம்சமாகும், இதில் சிறிதளவு சறுகல் ஏற்பட்டாலும் ஈற்றில் நினையாதளவு பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்பது எள்ளளவும் சந்தேகமில்லை. கல்வித்துறையில் பட்டம் பெற்றவர்களில் சிலர் கற்கின்ற காலங்களில் நடந்துகொள்ளும் விதத்திற்கும் பட்டம் பெற்றபின்னர் பண்பாடற்று ஒழுக்கமற்று மார்க்கமுமற்று நடந்துகொள்வதைப் பார்க்கையில் பாரியளவு வித்தியாசம் இருக்கின்றது என்பதை நன்றாக அனைவராலும் அவதானிக்க முடிகின்றது. மார்க்கம், ஒழுக்கவிழுமியங்கள், பண்பாடுகளற்ற கல்வி முற்றிலும் பிரயோசனமானற்றது என்றால் மிகையாகாது.



இஸ்லாம் திருமணத்திற்கான மணமகள், மணமகன் தேர்வின் பொழுது மார்க்கத்திற்கு முன்னுரிமை கொடுக்குமாறு வலியுறத்தும் அதேவேளை, மார்க்கம் என்பது நடைமுறையில் அதனை வெளிக்காட்டும் நிலையையும் வரலாற்று நிகழ்வுகளினூடாக எமக்கு எடுத்துக் கூறியிருக்கின்றது. மார்க்கம் ஒழுங்கில்லையேல் அங்கு தரமான குணங்களையோ, பண்புகளையோ எதிர்பார்ப்பது சாத்தியமற்றதாகும். அறிவு, அழகு, கட்டழகு கொண்ட உடல், பட்டம் பதவி, சொத்து செல்வம், குடும்பம் ஊர் கோத்திரப் பெருமை இவை அனைத்தும் நிரப்பமாக இருந்தும் ஈடேற்றமும் நிம்மதியுமளிக்கும் மார்க்கமில்லையெனில்  அனைத்தும் பெற்று ஒன்றும் பெறாததைப் போன்றதாகும்.



மணமகன், மணமகள் தேர்வில் வெறும் பண்பாடற்ற பட்டம் பதவி மற்றும் நடைமுறையில் அற்றுப்போன மார்க்கத்தை நம்பி ஏமாறாது ஒழுக்க மாண்புகளைக் கொண்ட கற்றறிந்த அறிவுடையோரையும், மார்க்கத்தை நடைமுறையில் அமுலாக்கும் மார்க்கப் பற்றுள்ளவர்களையும் அடையாளம் கண்டு சிறப்பான தேர்வை மேற்கொள்வதில் முயற்சியெடுப்போம்.



நட்புடன்
அ(z)ஸ்ஹான் ஹனீபா
ஹுஸைனியாபுரம்-பாலாவி
Disqus Comments