நாட்டில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 10 வீதம் வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ் வருடத்தின் இதுவரையான 9 மாதங்களில் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. தடுப்பு வேலைத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இதன்படி இவ் வருடம் எச்.ஐ.வி. தொற்றுள்ள 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளமைக்கு காரணம் இது குறித்த பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையே என சிசிர லியனகே சுட்டிக்காட்டியுள்ளார்.
நடமாடும் சேவைகளை நடத்தி எச்.ஐ.வி. குறித்த பரிசோதனைகள் சாதாரண மக்களிடம் மேற்கொள்ளப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது.
விஷேடமாக விபச்சாரிகள், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள், போதைப் பொருள் பயன்படுத்துவோர் பெருமளவில் இந்த பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாக சிசிர லியனகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.