(Muhshi Sir) புத்தளம் தேர்தல் தொகுதிக்கே பிரத்தியேகமான பிரச்சினை அடிக்கடி மின்சாரம் தடைபடுவதாகும். இது இன்று நேற்றல்ல பல வருடங்களாக தொடரும் மாபெரும் துர்ப்பாக்கிய நிகழ்வாகும். இதற்கு நிரந்தர தீர்வைக் காணுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டியுள்ளது. வெயில் காலம், மழைக் காலம் என்பது பாராமல் மின்சாரம் தடைபடுவதை எல்லோரும் அறிவர். மின்சார கம்பிகளில் உப்பு படிவதே இதற்கு காரணம் எனக் கூறி மின்சார சபை தப்பித்துக் கொள்ள முயற்சித்து வருகிறது. கம்பியை கழுவ வேண்டும். உப மின்மாற்றி பொருத்துகிறோம், திருத்தப் பணிகளை மேற்கொள்கிறோம் என்றெல்லாம் கூறி நமது அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், மக்கள் ஆகியோரின் வாய்களை அடைத்து விடுவது மின்சார சபைக்கு வாடிக்கையான வேடிக்கையாக போய்விட்டது.
2013- 2016 காலப் பகுதியில் மே- ஒக்டோபர் வரையில் ஒவ்வொரு மாதமும் 100 ற்கு மேற்பட்ட தடவைகள் மின்சாரம் தடைபட்டுள்ளன. ஆகவே அடுத்த வருடமும் இந்த அவல நிலை தொடரவே போகின்றது. இதற்கு நிரத்தரத் தீர்வை கண்டு கொள்ள வேண்டும் அல்லவா? கடந்த 3.11.2016 ல் புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் வடமேல் மாகாண முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்து இது குறித்து பேசுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினோம். முதலமைச்சர் Minute இட்டுத் தந்த கடிதத்தை மாவட்ட செயலாளரிடம் நாம் கையளித்தோம். அதன் பிரதி கூட நம்மிடம் உண்டு. அது போல புத்தளம் தொகுதி ஆளும், எதிர்க் கட்சி அரசியல் பிரமுகர்களுக்கும் கடிதங்கள் அனுப்பியிருந்தோம். அதில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் கிங்ஸ்லி லால் அதை மாவட்ட செயலாளருக்கு அனுப்பி விட அதுவும் நிகழ்ச்சி நிரலில் இடம் பிடித்து விட்டது. இந்நிலையில் மேற்படி கூட்டத்தில் மாவட்ட செயலாளரே மின்சார சபை அதிகாரியிடம் இது குறித்து வினவவே அதை நாம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று பதில் அளித்து விட்டு அமர்ந்து விட்டார். எவ்வளவு தூரம் இது சீரியஸாக அங்கு பேசப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால்... அன்பானவர்களே!
நமது விவகாரங்கள் எவ்வளவு தூரம் மாவட்ட அபிவிருத்திக் குழு, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் கையாளப்படுகிறது என்ற அங்கலாய்ப்புடன் கூட்ட முடிவில் நாம் வெளியேறியதுடன் கற்றவர்களும், விடயங்கள் தொடர்பில் போதிய தெளிவும், ஆளுமையும் உள்ளவர்கள் நமக்காக பேசுவதற்கும், கையாள்வதற்கும் இது போன்ற இடங்களில் தேவையே என்ற ஏக்கப் பெருமூச்சுடன் வெளியேறினோம். சந்தர்ப்பம் வரும் என்ற நம்பிக்கையை மாத்திரம் நாம் இழக்கவில்லை. இன்ஷா அல்லாஹ்.
