இம்முறை க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையை எழுதிய மாணவர்கள் உயர் தரத்துக்கு எந்தத்துறையைத் தெரிவு செய்வது பொருத்தமென்று எதிர்பார்த்திருக்கும் இவ்வேளையில், அது தொடர்பான கருத்துக்களையும், வழிகாட்டுதல்களையும் பகிர்ந்து கொள்வது பொருத்தமென்று நினைக்கிறேன்.
உயர் தரத்துறையைத் தேர்வு செய்வதென்பது ஒரு பரீட்சைக்கு ஆயத்தமாவதற்கான துறையைத் தெரிவு செய்கிறோமென்பதை விடவும் தங்கள் வாழ்க்கையில் எந்தத்திசையில் பயணித்து, பணியாற்றப் போகிறோமென்பதைத் தீர்மானிக்கும் ஒரு தருணமென்பதே உண்மை.
பதினொரு வருடமும் ஒரே திசையில் பயணித்த படகுகள் திசை மாறும் முற்றமே இது. ஆனால், மாணவர்கள் தங்கள் சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகளை அல்லது ஏதாவது ஒரு பின்புலத்தை மாத்திரம் வைத்து உயர் தரத்துறையைத் தேர்வு செய்வதென்பது பொதுவாக எல்லோரும் விடும் தவறாகவுள்ளது. சரியான வழிகாட்டுதலும் அத்துறை தொடர்பான புரிந்துணர்வுமில்லாமல் அல்லது பெற்றோரின் குடும்பத்தின் வற்புறுத்தலால் தெரிவு செய்யப்படும் துறைகள் இறுதியில் தோல்விக்கே வழி வகுக்கும்.
மாணவர்கள் உயர் தரத்துறையொன்றைத் தெரிவு செய்யும் போது, பின்வருவனவற்றைக் கருத்திற் கொள்வது மிக முக்கியமானது.
1. துறை தொடர்பான மாணவர்களது விருப்பம்:
துறை தொடர்பான விருப்பமெனும் போது, அத்துறை தொடர்பாக எதிர்காலத்தில் வரக்கூடிய தொழில் வாய்ப்புக்களில் பணியாற்றக்கூடிய விருப்பம். அந்தத்துறையில் உள்ளடங்கியிருக்கும் பிரதான பாடங்கள் தொடர்பான விருப்பம் என்பன உள்ளடங்கும்.
2. துறை சார்ந்த மாணவர்களது இயலுமை:
இயலுமை எனும் போது மாணவர்களது க.பொ.த (சா/த) பெறுபேறு, குடும்ப வருமான நிலை, அவர்களது மனப்பாங்கு என்பன உள்ளடங்கும். துறை தொடர்பான விருப்பமும் இயலுமையும் பொருந்தி வரவுள்ள துறைகளைத்தெரிவு செய்தோரே இன்று சாதனையாளர்களாக பெயர் பதித்துள்ளனர்.
அத்தோடு, இன்றைய கால கட்டங்களில் மாணவர்கள் அவர்களுக்காக நடாத்தப்படும் வழிகாட்டல் கருத்தரங்குகள், ஆலோசனை பெறுவதற்காக சந்திக்கும் நபர்கள் தொடர்பிலும் புத்திசாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும். யார் எதைச்சொன்னாலும் ஏற்று உடனடியாக துறை தொடர்பான தீர்மானத்துக்கு வந்து விடாது, அக்கருத்துக்களை ஒன்றுக்கு இரண்டு தடவை தர்க்கரீதியாக சரி பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், இத்தோடு சம்பந்தப்பட்ட நபர்கள் தாங்கள் சம்பந்தப்பட்ட துறைகளை மட்டுமே தொழில் வாய்ப்புக்கள் கொண்ட சிறந்த துறைகளாக விளக்கிடவும், ஏனைய துறைகளை இழிவாக நோக்கிடவும் வாய்ப்புக்கள் அதிகம்.
அது தான் உண்மையும் கூட. விஞ்ஞான துறை சார்ந்தோர் அத்துறை தான் சிறந்ததெனவும் மறுபக்கம் வர்த்தகத்துறை சார்ந்த்தோர் அத்துறை தான் சிறந்ததெனவும் கூறிட வாய்ப்புக்கள் அதிகம். ஆனால், மாணவர்களே நீங்கள் சிறந்த துறையைத்தேர்வு செய்வதை விட உங்களுக்குப் பொருத்தமான துறையைத்தெரிவு செய்வதிலேயே உங்களின் வெற்றி தங்கியுள்ளது.
இவ்வாறான வழிகாட்டல் கருத்தரங்குகளை நடத்துபவர்களும் தங்கள் சுயலாபங்களுக்காக தாங்கள் கற்பிக்கும் துறைகளுக்கு மாணவர்களை அதிகப்படுத்தி தங்கள் வருமானங்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டுமென்பதற்காக வளர்ந்து வரும் அம்மாணவர்களை பொருத்தமற்ற துறைகளுக்கு வழிகாட்டி, அவர்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடாது, மிகப்பொருத்தமான துறைகளுக்கு அவர்களை வழி நடத்துவது உங்கள் பொறுப்பும் கடமையுமாகும்.
குறிப்பாக, பெண் மாணவிகள் தங்கள் விருப்பம், இயலுமையுடன் சேர்த்து தங்கள் பாதுகாப்பையும், மார்க்க வரையறைகளையும் உறுதிப்படுத்தக்கூடிய துறைகளைத்தேர்வு செய்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும். எமது சமூகம் எவ்வாறான துறைகளில் பெண்களின் பங்களிப்புக்களை எதிர்பார்த்து நிற்கின்றதோ அந்தத்துறையினூடாக தங்களை வளர்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பாகும். ஏன் இந்தத்துறையில் எனக்கு முடியாதென சிந்திப்பதை விடுத்து, இந்த துறையைக் கொண்டு என்னால் என்ன பங்களிப்பை சமூகத்துக்கு வழங்க முடியுமெனச் சிந்திப்பது பெண்களை எதிர்காலத்தில் சமூகத்திற்குப் பயனுள்ள துறைகளில் சேவையாற்ற வழி வகுக்கும். ஆண்களின் பங்களிப்புக்களே போதும் என்று ஒரு சில துறைகள் இருக்க, இன்னும் சில துறைசார்ந்த தொழில்வாய்ப்புக்கள் பெண்களின் பங்களிப்பை எதிர்பார்த்திருப்பதை பெண்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இறுதியாக,
பெற்றோர்கள் தங்கள் பெயர் புகழுக்காக தாங்கள் விரும்பும் துறைகளை தங்கள் பிள்ளைகளின் மேல் திணிக்காது, அவர்களின் எதிர்காலத்துக்கும், அவர்களின் அறிவு, திறன் மற்றும் மனப்பாங்குகளுக்கு பொருத்தமான துறையைத்தெரிவு செய்வதற்கு வழிவிட வேண்டும். மட்டுமல்லாது, அவர்கள் எதைத்தெரிவு செய்தாலும் பரவாயில்லையென்றும் இருந்து விடாதீர்கள். அதுவும் அவர்களின் எதிர்காலத்திற்குப் பொருத்தமில்லாமல் அமைந்து விடலாம்.
எனவே,
பெற்றோர் எந்த இடத்தில் உங்களது வழிகாட்டுதலும் தலையீடும் தேவையோ அவ்விடத்தில் வழிகாட்டிடத் தவறி விடாதீர்கள். உங்கள் பிள்ளைகளின் திறன்களையும், இயல்புகளையும் அறிந்த நீங்கள் நடு நிலையாய்ச் சிந்தித்து அவர்களைச் செம்மைப்படுத்திடுங்கள். எனவே தான் மாணவர்களே! நாளைய எம் சமூகத்தின் தலைவர்களே! உயர் தரத்துறையின் பெறுமதியை உணர்ந்து, ஏற்கனவே துறைகளைத் தெரிவு செய்தோர் மீண்டும் ஒரு கனம் பொருத்தமான துறையைத்தான் தெரிவு செய்துள்ளோமா? எனச்சிந்திப்பதோடு, இதுவரை எதைத்தெரிவு செய்வதென்பதை எதிர்பார்த்திருந்தோர் மேற்குறிப்பிட்டவற்றைக் கருத்திற்கொண்டு மிகச்சிறந்த துறையைத் தெரிவு செய்து, அதில் சாதனையாளர்களாகப் பெயர் பதித்திட எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
Musthafa Mursideen
Chartered Accountancy (Final)
B.Sc Public Mgt. (Special) University of Sri Jayewardenepura
