Friday, June 21, 2013

2016 இல் இலங்கையின் சகல மாவட்டங்களிலும் 25 பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்

“எமது நாட்டில் திறமையான பிள்ளைகள் திறமையற்ற பிள்ளைகள் என்று இரண்டு இனங்களில்லை. நாட்டிற்கு மிகவும் அவசியமானதும் நாட்டிற்குச் சேவை செய்யக்கூடியதுமான எமது பிள்ளைகள் இந்த நாட்டின் இளைய சந்ததியினர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி; அனைத்து பிள்ளைகளும் இந்த நாட்டிற்காக பிறந்தவர்க ளென்றும் அவர்களோடு இணைந்து அனைவரும் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனவும் தெரிவித்தார்.

உலகெங்கிலும் சென்று நாம் இலங்கையர் என்று கூறி பெருமைப்படும் அளவில் இலங்கை உன்னதமான நாடாக கட்டியெழுப்பப்பட்டுள்ளது என தெரிவித்த ஜனாதிபதி; இது ஒரு தோல்வியான நாடு என எப்போதும் சர்வதேசத்திற்குக் காட்ட விளையும் தரப்பினருக்கு நாம் பெற்றுக்கொண்ட வெற்றிகள் பதிலாக அமையும் எனவும் தெரிவித்தார். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் நவீன தொழில்நுட்பப் பாடவிதானத்தைப் புதிதாக அறிமுகப்படுத்தும் விசேட நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியிலிருந்து பெருமளவு மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அமைச்சர்கள் பந்துல குணவர்தன, எஸ்.பி. திசாநாயக்க, துமிந்த திசாநாயக்க, ஜோன் செனவிரத்ன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கல்வித்துறை மேற்பார்வை பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரூ ஆகியோர் உட்பட துறை சார்ந்த முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;

கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழில்நுட்பப் பாடவிதானத்தை அறிமுகப்படுத்தியுள்ளமை சர்வதேசத்தின் பாராட்டுக்கு இலக்காகியுள்ளது. இதனை கடந்த 20 வருடங்களுக்கு முன்னரே நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும் என கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்ததை நான் குறிப்பிடவிரும்புகிறேன்.

ற்போது இந்த செயற்பாட்டை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் ஈடுபட்டவர்கள் உண்மையில் பாராட்டுக்குரியவர்கள்.

உயர்தரத்தோடு தொழில்நுட்பப் பாடத்தை அறிமுகப்படுத்துவது முழு நாடும் மகிழ்ச்சிப்படக்கூடிய விடயமாகும். குறிப்பாக மாணவர்கள் பெருமகிழ்ச்சியுறும் நாள் இதுவாகும்.

2006 ஆம் ஆண்டில் நான் நாட்டுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தேன். அன்று நாம் முகங்கொடுத்த சவால்கள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கால எமது சந்ததிக்கு விட்டு வைக்கப்போவதில்லை என்று. அதை நான் நிறைவேற்றியுள்ளேன். எமது உயிரைப் பணயம் வைத்து பாரிய அர்ப்பணிப்புடன் அதற்காக நாம் செயற்பட்டுள்ளோம்.

இன்று இந்த நாட்டில் எந்தப் பிரதேசத்திலும் அச்சுறுத்தல், மரண பயம் இல்லை. எந்த திசைக்கும் சுதந்திரமாக சென்று வரக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. வடக்கில் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களை யுத்தத்துக்கு இழுத்துச் சென்ற யுகம் ஒன்றிருந்தது. அதேபோன்று ஏனைய பகுதி பிள்ளைகள் மரண பயத்துடன் நாடுகளில் இரவைக் கழித்த யுகம் அது.

இன்று அத்தகைய நிலை மாற்றப்பட்டுள்ளது. அபிவிருத்தி யுகத்தை ஆரம்பித்து ஆசியாவிலேயே தூய்மையான நகரங்களை இங்கு உருவாக்கி வீதிகள் அதிவேக நெடுஞ்சாலைகள் என மாற்றங் காணப்பட்டுள்ளது. நூற்றுக்கு 95 வீதமானவர்களுக்கு நாட்டில் மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. உலகில் எந்த நாட்டுக்குச் சென்றாலும் எமது நாட்டை பெருமையுடன் குறிப்பிடும் வகையில் நாடு கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

தற்போது வருடாந்தம் மூன்று இலட்சம் பிள்ளைகள் பாடசாலைகளில் சேர்க்கப்படுகிறார்கள். இவர்கள் உயர்தரம் வரை கற்றபின் 26,000 பேரே பல்கலைக்கழகத்துக்கு அனுமதிக்கப்படுகின் றனர். உயர் தரத்திற்குப் பின் சுமார் மூன்று இலட்சம் பிள்ளைகள் கைவிடப் பட்டவர்களாக உள்ளனர். இவர்கள் சித்தி பெறாதவர்களாகவும் திறமையற்ற வர்களாகவும் கணிக்கப்படுகின்றனர்.

உயர்தரத்தில் சித்தி பெறத் தவறினால் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவு இல்லாமல் தொழில் வாய்ப்புப் பெற முடியாது என்ற நிலையே ஒரு காலத்தில் காணப்பட்டது. வரலாற்றில் தொடர்ந்து இந்த பிரச்சினைக்கே நாம் தீர்வு காண விளைகின்றோம். இது நீண்ட காலம் இந்த நாட்டில் இருந்து வந்த பிரச்சினையாகும். தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று பார்க்க முடியாது. அனைத்து மாணவர்களும் எதிர்நோக்கிய பிரச்சினை இது. இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நான் 1994 இல் ஒரு அமைச்சராக முதலில் நாடெங்கிலும் தொழிற் பயிற்சி நிலையங்களை நிறுவ நடவடிக்கை எடுத்தேன். நாம் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்திற்கு தொழில் நவீன சட்டத்தை இணைப்பது இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கே. கல்வியமைச்சு, உயர் கல்வியமைச்சு மற்றும் திறனபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.

நாம் பாடசாலைகளில் தொழில்நுட்பம் கற்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளோம். அவர்களுக்காக ஹோமாகமயில் 53 ஏக்கரில் “நெனோ டெக்னோ லோஜி” பூங்கா ஒன்றை நிர்மாணித்து வருகிறோம். பல்கலைக்கழகங்களில் தொழில்நுட்ப பீடங்களை புதிதாக ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். இது தொடர்பில் சகல உபவேந்தர்களினதும் இணக்கப்பாட்டைப் பெற்றுள்ளோம். இம்முறை ரத்மலானை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு 370 பேரை அனுமதித்துள்ளோம். ஏனைய பல்கலைக்கழகங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி தொழில்நுட்பப் பட்டத்திற்காக மேலும் 1000 பேரை இணைத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்கென 2016 இல் சகல மாவட்டங்களிலும் தலா ஒன்று என்ற ரீதியில் 25 பல்கலைக்கழகங்களை நிறுவவுள்ளோம். 7500 பேரை அவற்றுக்கு சேர்க்கவுள்ளோம். கல்விக் கல்லூரிகளில் வருடாந்தம் 200 பேரை இணைத்துக்கொள்ளவுள்ளோம். கல்வி அமைச்சர்களுக்கு இந்த இலக்குகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதற்கிணங்க 2016 இல் கணிதம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான மாணவர்களை 40 வீதமாகவும் வணிக மாணவர்களை 35 வீதமாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கான நிதியை செலவிடவும் நாம் பின்னிற்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
Disqus Comments