Saturday, July 6, 2013

இஸ்லாம் மதம் அரபு பிரதேசத்திலிருந்தும், இந்து மதம் இந்தியாவிலிருந்தும், கத்தோலிக்க மதம் மேற்குலகிலிருந்தும், பெளத்த மதம் பாரத தேசத்திலிருந்தும் இலங்கைக்கு வந்தது

அல்குர்ஆன் தாம் பிறந்த மண்ணையே முதலில் நேசிக்குமாறு கூறுகின்றது. அது ஈமானில் (நம்பிக்கையில்) ஒரு பகுதியே. அதனால் அடிப்படைவாதத்தை ஒதுக்க வேண்டும். 

அடிப்படைவாதத்தையும் இனவாதத்தையும் நாம் ஒதுக்கிவிட வேண்டும். நாம் அடுத்த இனத்தவர்களுக்கு எதிரானவர்களாகப் பிறப்பதில்லை. இனவாதம் முதலில் தம்முடையவர்களின் இரத்தத்தையே குடிக்கக் கூடியது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அளுத்கம – சீனாவத்தை ஜும்ஆ பள்ளிவாசல் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது பள்ளிவாசலாகவும், 1020 வருடங்கள் பழமையானதுமான இப்பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொடர்ந்தும் உரையாறுகையில்:

இப்பள்ளிவாசலில் வழிபடும் முஸ்லிம் மக்கள் அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளபடி எல்லோருடனும் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். எனக்கும், பேருவளைக்குமிடையிலான தொடர்பு மிகவும்
பழமையானது. அது 1970 ஆம் ஆண்டில் நான் எம்.பி. ஆகவும் முன்பானது. நாம் இவ்வரலாற்று சிறப்பு மிக்க இப்பள்ளிவாசலை புனரமைத்து திறந்து வைப்பதன் மூலம் சகோதரப் பிணைப்பைத் தொடர்ந்தும் கொண்டு செல்லவென பலமளிப்பதாகும்.

கடந்த வருடம் நுவரெலியா ஜும்ஆ பள்ளிவாசலை முழுமையாகப் புனரமைத்து திறந்து வைத்தோம். இந்நாட்டின் அரச தலைவர் ஒருவர் திறந்து வைத்த முதலாவது பள்ளிவாசல் அதுவே என நான் நம்புகின்றேன்.நாம் நாட்டில் மதங்களுக்கிடையில் சக வாழ்வு நிலையை ஏற்படுத்தவும், எல்லா
மதங்களது மேம்பாட்டுக்காகவும் செயற்படுபவர்களாவர். ஆனால் நாம் வெளிநாடு சென்றால், வெளிநாட்டு பத்திரிகைகளையும், இணைய தளங்களையும் பார்த்தால் இங்கு பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதாக செய்திகளைக் காண முடிகின்றது.

இந்த நாட்டில் பெளத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்திற்குமே பாதிப்புக்கள் ஏற்பட்டது கிடையாது. என்றாலும் ஓரிரு சிறு சிறு சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றை நாம் இல்லை என்று கூறவில்லை. அவற்றில் தனிப்பட்ட சம்பவங்கள் உள்ளன. அண்மையில்
வெலிமடயில் ஒரு சம்பவம் இடம்பெற்றது. அதனை பெரும்பாலானவர்கள் அறியமாட்டார்கள். அதனை நாம் அமைதியான முறையில் தீர்த்து வைத்தோம். அப்படியான சம்பவத்தை எந்த நபர் செய்தாலும் அவருக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அண்மையில் பலாங்கொடையிலும் சண்டையை ஏற்படுத்தும் சூழ்ச்சியின் அடிப்படையிலும் ஒரு சம்பவம் இடம்பெற்றது. அதனையும் நாம் சுமுகமாக தீர்த்து வைத்தோம். இப்படியான சம்பவங்களை ஏற்படுத்துவதற்காகவே ஒரு சிலர் உள்ளனர். இதனை நாம் மறந்து விடலாகாது. நாம் இந்நாட்டின் குரூர பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்த போது அப்பிரதேசங்களிலுள்ள எந்தவொரு மத வழிபாட்டுத் தலத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நாம் தெளிவாக அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தோம். அதனால் அமைதி, சமாதானம் நிலவும் இச்சூழலிலும் அப்படியான சம்பவங்கள் இடம்பெற இடமளிக்க மாட்டோம்.

தற்போது கொழும்பில் புதிதாக பள்ளிவாசல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் புனரமைக்கப்பட்டுள்ளன, விரிவுபடுத்தப்பட்டுள்ளன, அவ்வாறுதான் இப்பள்ளிவாசலும் நவீனமுறையில் புனரமைக்கப்பட்டிருக்கின்றது. நாமும் அமைத்துள்ளோம். உண்மையில் நாம் இவற்றை இருதயபூர்வமாக வாழ்த்துபவர்கள்.

அதற்கு பழைய வரலாறுகளை முன்னுதாரணமாகக் கூறவரவில்லை. மாறாக அண்மைய வரலாற்றில் பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெறும் யுகத்தின் போது இலங்கையில் வாழ்ந்த முஸ்லிம் மக்களும், முஸ்லிம் தலைவர்களும் நாடு குறித்துத் தான் முதலில் சிந்தித்தார்கள். அவர்கள் இது எமது நாடு என்று தான் கதைத்தார்கள். அவர்கள், ‘சிங்கள மக்கள் இந்நாட்டின் மூத்த சகோதரர்கள். அதனால் முதலில் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்குங்கள். நாம் எம் மூத்த சகோதரர்களுடன் சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம் என்று கலாநிதி டி. பி. ஜாயா போன்ற தலைவர்கள் தான் அவ்வாறு பகிரங்கமாகக் குறிப்பிட்டனர். இந்த வரலாற்றை அழிக்க முடியாது.

அல்குர்ஆன் சகோதரரர்களை நம்புமாறு கூறுகின்றது. இந்த நம்பிக்கை எமக்கிடையில் நேற்று இன்று ஆரம்பமானதல்ல. அன்று 1505 ல் பறங்கியர் இந்நாட்டுக்கு வருகை தந்த போது பேருவளை போன்ற கரையோரப் பிரதேசங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலவிதமான அசெளகரியங்களுக்கும்,
நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்தார்கள். அச்சமயத்தில் மத்திய மலைநாட்டின் மன்னராக செனரத் மன்னர் இருந்தார். பறங்கியரின் (போர்த்துகேயரின்) கெடுபிடிகளிலிருந்து தப்பி மத்திய மலைநாட்டுக்கு வந்த முஸ்லிம்களை செனரத் மன்னர் தமது நிர்வாகத்தின் கீழிருந்த மட்டக்களப்பில் முதலில் குடியாமர்த்தினார்.

தங்கள் ஒவ்வொரு பிரதேசங்களிலிருந்து தான் இங்கு வந்தன என்பதை நாமறிவோம். இஸ்லாம் மதம் அரபு பிரதேசத்திலிருந்தும், இந்து மதம் இந்தியாவிலிருந்தும், கத்தோலிக்க மதம் மேற்குலகிலிருந்தும், பெளத்த மதம் பாரத தேசத்திலிருந்தும் தான் இங்கு வந்தது. பெளத்தம் ஒரு பொஸன் தினத்தில் தான் வந்தது. இது அரபு பிரதேசமோ, இந்தியா, ஐரோப்பாவோ அல்ல. இது இலங்கை. நான் அண்மையில் சீஷெல் நாட்டுக்கு சென்றேன். அங்கு என்னை வரவேற்க ஜனாதிபதி வருகை தந்திருந்தார். அதுவும் சாதாரண மனிதரைப் போன்று அவர் டவுஸர் சேர்ட் அணிந்திருந்தார். ஏனெனில் அந்த நாட்டில் அந்தளவுக்கு உஷ்ணமே அதற்குக் காரணம். அந்நாடும் பிரித்தானியாவின் ஆளுகையின் கீழிருந்த நாடு. அது அண்மையில் தான் சுதந்திரம் பெற்றது.

அல்குர்ஆன் தாம் பிறந்த மண்ணையே முதலில் நேசிக்குமாறு கூறுகின்றது. அது ஈமானில் (நம்பிக்கையில்) ஒரு பகுதியே. அதனால் அடிப்படைவாதத்தை ஒதுக்க வேண்டும். அடிப்படைவாதத்தையும் இனவாதத்தையும் நாம் ஒதுக்கிவிட வேண்டும். நாம் அடுத்த இனத்தவர்களுக்கு எதிரானவர்களாகப் பிறப்பதில்லை. இனவாதம் முதலில் தம்முடையவர்களின் இரத்தத்தையே குடிக்கக் கூடியது. அமைச்சர் பெளஸி கூறுவது போன்று அடிப்படை வாதம் ஹராமாகவும், தேசப்பற்று ஹலாலாகவும் ஆக வேண்டும். இப்போது நாட்டில் எல்லா இடத்திலும் முஸ்லிம்கள் வாழுகின்றார்கள். அவர்கள் இல்லாத இடமில்லை.

இன ரீதியாக நாட்டைப் பிரிக்க நாம் தயாரில்லை. அவ்வாறு பிரிப்பதாயின் பேருவளை, தர்கா நகர், பாணந்துறை, கெசல்வத்தை, பாணந்துறையில் வாழும் மக்களுக்கு என்ன ஆவது நன்மை கிடைக்குமா? இல்லை.  ரபு நாடுகளிலிருந்து இங்கு வியாபாரிகள்தான் வந்தனர். அவர்கள் பெண்களை அழைத்து வரவில்லை. அவர்கள் இங்குள்ள சிங்களப் பெண்களை தான் திருமணம் முடித்து வாழ்ந்தனர். அவர்களது வழித்தோன்றல்களே முஸ்லிம்கள். அதனால் தூர நோக்குடன் செயற்படுங்கள்.

நன்றி :ஜப்னா முஸ்லிம்
Disqus Comments