Wednesday, August 21, 2013

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் கட்­டணம் 4 இலட்சம் ரூபா: அமைச்சர் பௌஸி

இவ்வருடத்துக்கான ஹஜ் கட்டணம் 4 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ஹஜ் பயணிகள் முகவர் நிலையங்களுக்கு 4 இலட்சம் ரூபாய்க்கு மேலதிகமாக செலுத்த வேண்டியதில்லை என ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.
இன்­று காலை அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே பெளஸி மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் ஹஜ் பயண ஏற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
வழமையை விடவும் இவ்வருடம் சவூதியில் ஹஜ் பயணிகள் குறைவாக அனுமதிக்கப்படுவதால் மக்கா, மதீனாவில் தங்குமிட வசதிகள் உட்பட செலவுகள் குறைவாக இருக்கும சாத்தியங்கள் இருப்பதால் ஹஜ் கட்டணம் 4 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
மக்கா, மதீனாவுக்கு குறைவான ஹஜ் யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படுவதனால் போட்டித் தன்மை குறைந்து செலவுகள் குறைவாக இருக்கும். கடந்த வருடங்களில் சுமார் 30 இலட்சம் ஹஜ் பயணிகள் அனுமதிக்கப்பட்டார்கள். இவ்வருடம் 15 இலட்சம் பயணிகளே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணமான 4 இலட்சம் ரூபாய்களுக்கு மேலதிகமாக முகவர் நிலையங்கள் அறவிடுவதாக இருந்தால் அதற்கான விசேட காரணங்கள் விசேட வசதிகள் தொடர்பாக ஹஜ் பயணியுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டு அதன் பிரதி ஹஜ் குழுவுக்கு வழங்கப்பட வேண்டும். இதைவிடுத்து 4 இலட்சம் ரூபாய்க்கு அதிகமாக அறவிடும் முகவர் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
( நன்றி விடிவெள்ளி )
Disqus Comments