Monday, September 30, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போனஸ் ஆசன விபரம்

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள போனஸ் ஆசனங்களில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரும் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

யாழ்.உதயன் விருந்தினர் விடுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'வடக்குமாகாண சபையின் இரண்டு வெகுமதி ஆசனத்தில் ஒன்று மன்னாரைச் சேர்ந்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் பிரதிநிதி அயூப் அஸ்மி என்பருக்கும் முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் வேட்பாளர் மேரி கமலா குணசீலன் என்பருக்கும் வழங்க கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சி தலைவர்களும்  வழங்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதில் முல்லைத்தீவுவைச் சேர்ந்த பெண் வேட்பாளருக்கு வழங்கப்பட்டுள்ள போனஸ் ஆசனம் சுழற்சி முறையில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அவர் ஒரு வருடகாலத்திற்கு மாகாண சபையில் உறுப்பினராக கடமையாற்றுவார். பின்னர் அந்த உறுப்பினர் பதவிக்கு பல்வேறு தரப்பினர் உள்வாங்கப்படுவார்கள்.  குறிப்பாக முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் மலைகயத் தமிழர்களின் பிரதிநிதிகள் உள்வாங்கப்படுவார்கள்' என்று அவர் தெரிவித்தார்
Disqus Comments