Wednesday, August 20, 2014

இலங்கை வீசா வழங்க மறுத்தாலும் ஐ.நா விசாரணைகள் நிறுத்தப்படமாட்டாது: நவநீதம்பிள்ளை

இலங்கை அரசாங்கம் வீசா வழங்க மறுத்தாலும், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் மாற்றங்கள் ஏற்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்தக்கருத்தை தெரிவித்துள்ளார்.

நவநீதம்பிள்ளையின் விசாரணைக்குழு, இலங்கைக்கு வர வீசா வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று முதல் தடவையாக அறிவித்தார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் விசாரணைகள் அவசியமில்லை. உள்ளுர் விசாரணைகள் போதுமானது என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

மக்கள் விரும்பாவிட்டால் ஐக்கிய நாடுகளின் விசாரணைகள் யாருக்கும் தேவையில்லை என்று மஹிந்த வலியுறுத்தியிருந்தார்.

இந்தநிலையில் இலங்கைக்குள் செல்ல தமது குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், இணையத்தள வசதிகளுடனும் செய்மதி வசதிகளுடனும் விசாரணைகளை நம்பகத்தன்மையுடன் முன்னெடுக்க முடியும் என்று நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும், அந்த நாட்டில் முறையான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபையால் முன்னெடுக்க முடிந்ததாக நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.
Disqus Comments