Wednesday, October 1, 2014

FACEBOOKயில் காதல் என்ற பெயரில் 18 வயது யுவதியை ஏமாற்றிய தேரருக்கு விளக்கமறியல்

முகப்புத்தகத்தில் பொய்ப் பெயரைப் பயன்படுத்தி 18 வயது பெண்ணொருவரை ஏமாற்றினார் என்று கூறப்படும் பௌத்த தேரர் ஒருவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு நீதவான் பூர்ணிமா பரணகம இன்று (30) உத்தரவிட்டார்.

தேரரான சந்தேகநபர், சாதாரண இளைஞர் தோற்றத்தில் சென்று மேற்படி யுவதியை சந்தித்தும் உள்ளார் என்றும் போலி நபராகத் தோன்றி ஆள்மாராட்டத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவரை கைது செய்ததாக பொலிஸார், நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதன்படி, மாத்தளை, வில்கமுவை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சமன் புஷ்பகுமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தகவல் வெளியானதை அடுத்து, குறித்த சந்தேகநபர் தனது காவியுடையை தவிர்த்துள்ளார் என நீதிமன்றத்தில் பொலிஸார் தெரிவித்தனர்.

சக தேரர் ஒருவருடைய பிரிதொரு விகாரைக்குச் சென்று, தனது காவியுடையைக் களைந்து சாதாரண இளைஞர்கள் அணியும் உடையொன்றை அணிந்துகொண்டே மேற்படி யுவதியைப் பார்ப்பதற்காக பலமுறை சென்றுள்ளார்.

இவ்விருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, காதல் தொடர்பு பேணப்பட்டு வந்ததாகவும் சந்தேகநபர் ஒரு பௌத்த தேரர் என்பதைத் தெரிந்துகொண்ட பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர் தனது காவியுடையை தவிர்த்ததாகவும் நீதவானிடம் பொலிஸார் தெரிவித்தனர்.
Disqus Comments