மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சில் சிக்கிச்சின்னாபின்னமாகிய பாகிஸ்தான் அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இதன் 10ஆவது ‘லீக்’ ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று நடந்தது.
இதில் 2 முறை சாம்பியனான மேற்கிந்தியத்தீவுகள் 1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணிகள் மோதின.
பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா டாஸ் வென்று மேற்கிந்தியத் தீவுகளை முதலில் விளையாட அழைத்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்கம் ஏமாற்றம் அளித்தது. 8 ஆவது ஓவரில் அந்த அணி 28 ஓட்டங்களில் 2 விக்கெட்டை இழந்தது.
அதிரடி தொடக்க வீரர் கெய்ல் 4 ஓட்டத்துடனும் மற்றொரு தொடக்க வீரர் சுமித் 23 ஓட்டத்துடனும் ஆட்டம் இழந்தனர்.
3 ஆவது விக்கெட்டான டாரன் பிராவோ–சாமுவேல்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. சாமுவேல்ஸ் 38 ஓட்டங்களுடன் வெளியேறினார். நன்றாக ஆடி வந்த பிராவோ 49 ஓட்டங்களுடன் காயத்துடன் வெளியேறினர்.
பின்னர் வந்த ராம்தின், லெண்டில் சிம்மன்ஸ் அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ராம்தின் 51 ஓட்டத்துடன் வெளியேறினார். டெரன் சாமி 30 ஓட்டங்களுடன் எடுத்தார். 8 ஆவது வீரராக களம் இறங்கிய அன்று ரஸ்சல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 13 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 42 ஓட்டங்களை எடுத்து அணியின் ஸ்கோரை 300–க்கு கொண்டு வந்தார்.
ஆட்டத்தின் கடைசி பந்தில் சிம்மன்ஸ் 50 ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தார். மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 310 ஓட்டங்களை குவித்தது. ஹரிஸ் சோகைல் 2 விக்கெட்டும், முகமது இர்பான், சோகைல்கான், வகாப் ரியாஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
311 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேக பந்து வீரர் ஜெரோம் டெய்லரின் அனல் பறக்கும் பந்து வீச்சால் அந்த அணி நிலை குலைந்து போனது.
பாகிஸ்தான் அணி ஒரு ஓட்டத்தை பெற்று 4 விக்கெட்டை இழந்து மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. டெய்லர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் ஜாம்ஷெட் (0), யூஸ்ஸ்கான் (0) ஆட்டம் இழந்தனர்.
டெய்லரின் 2 ஆவது ஓவரில் (ஆட்டத்தின் 3 ஆவது ஓவர்) ஹாரிஸ் சோகைல் (0) அவுட் ஆனார். அதற்கு அடுத்த ஓவரில் அகமது ஷேசாத் 1 ஓட்டத்துடன் வெளியேறினார். அவரது விக்கெட்டை கேப்டன் ஹோல்டர் கைப்பற்றினார். சிறிது நேரத்தில் பாகிஸ்தான் அணியின் 5 ஆவது விக்கெட்டும் விழுந்தது. கேப்டன் மிஸ்பா உல்–ஹக் 7 ஓட்டத்துடன் ரஸ்சல் பந்தில் ஆட்டம் இழந்தார். 10.3 ஆவது ஓவரில் அந்த அணி 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.
6 ஆவது விக்கெட்டான சோயிப் மசூத்–உமர் அக்மல் ஜோடியை அணியை சரிவில் இருந்து மீட்கும் பொருட்டு பொறுப்புடன் ஆடியது. 25 ஆவது ஓவரில் அந்த அணி 100 ஓட்டங்களை தொட்டது. டெரன் சமி இந்த ஜோடியை பிரித்தார். சோயிப் மசூத் 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவர் 66 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் இந்த ஓட்டத்தை எடுத்தார். அப்போது ஸ்கோர் 105 ஆக இருந்தது.
இதேபோல் உமர் அக்மல் 59 ஓட்டங்களையும் அப்ரிடி 28 ஓட்டங்களையும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் அடுத்தடுத்து வெளியேற, பாகிஸ்தான் அணி 39 ஓவர்களிலேயே 160 ஓட்டங்களைப் பெற்று சுருண்டது.
இதனால், மேற்கிந்தியத் தீவுகள் அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரஸ்சல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
