Saturday, February 28, 2015

இந்திய அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது.
11 ஆவது உலகக் கிண்ணத் தொடர் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் இடம்பெற்று வருகின்றது.
அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் இன்று இடம்பெற்ற உலகக் கிண்ண லீக் போட்டியில் குழு “பி ” யில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும்  ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணிகள் ஒன்றையொன்று சந்தித்தன.
இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி  முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிங்கிய ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி 31.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி சார்பாக அன்வர் 35 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். ஏனைய வீரர்கள்  இந்திய அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்கத் தடுமாறி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் யாதேவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
103 என்ற இலகுவான வெற்றி இலக்குடன் களமிங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 9 விக்கெட்டுகளால் வெற்றி  பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் விராட் கோலி ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்து வீச்சில் ஐக்கிய அரபு இராஜ்ஜிய அணி சார்பாக நவீட் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக சுழல்பந்து வீச்சில் மிரட்டிய அஸ்வின் தெரிவு செய்யப்பட்டார்.
Disqus Comments