முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச பிரதமராவதில் எது விதமான குறையும் இல்லையென தெரிவித்துள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில ரஷ்ய அதிபர் புட்டினால் முடியுமென்றால் மஹிந்த ராஜபக்சவால் ஏன் முடியாது என கேள்வியெழுப்பியுள்ளார்.
நாளைய தினம் கம்மன்பில – விமல் வீரவன்ச கூட்டணியால் ஏற்பாடு செய்திருக்கும் மஹிந்தவோடு நாட்டை வெல்வோம் எனும் தொனிப்பொருளிலான பொதுக் கூட்டத்திற்கு மஹிந்த ராஜபக்ச வருவாரா இல்லையா என்பதை நாளை பார்க்கும்படி தெரிவிக்கும் அவர், மஹிந்த ராஜபக்ச வருவார் என்று கூறி இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்யவில்லையெனவும் மஹிந்தவுக்கு வாக்களித்த மக்களையே அழைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே மிகப்பெரிய நாடான ரஷ்ய ஜனாதிபதியாக இருந்த விலட்மிர் புட்டின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக இருந்து விட்டு அதைவிட தரமும் அதிகாரமும் குறைந்த பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஆனால் நாங்கள் இங்கே மஹிந்த ராஜபக்சவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக்கவே முயற்சிக்கிறோம் எனவும் கம்மன்பில தெரிவித்துள்ளமையும் புதிய அரசியல் சட்டம் நிறைவேற்றுப்படுமிடத்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்பட்டு பிரதமர் தலைமையிலான பாராளுமன்ற ஜனநாயகம் அமுலுக்கு வரும் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
