பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது மக்கள் ஆதரவு பெருகிவிடும் என்பதற்காகவே இலங்கைக்கு எதிரான ஐ.நா. போர்க்குற்ற விசாரணை அறிக்கையைப் பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படும். நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் இந்த விசாரணை மஹிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவை அதிகரிக்கச் செய்துவிடும் என புதிய அரசாங்கம் அச்சமடைந்திருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முசம்மில் தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். தேசிய உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்றுக்கு அமைய யுத்தக் குற்ற விசாரணைகள் உள்நாட்டில் நடத்தப்படும் என வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பிய கடிதத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். சர்வதேச ரீதியில் செய்யவிருந்த விசாரணையை அரசாங்கம் உள்நாட்டில் செய்யவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அது மட்டுமன்றி உள்ளக விசாரணைக்கு ஐ.நா.வின் தொழில்நுட்ப உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் என்றும், விசாரணையாளர்கள் இலங்கைக்கு வர அனுமதி வழங்கப்படும் என்றும், இந்த அறிக்கையை மேலும் பலப்படுத்த ஒத்து ழைப்பு வழங்கப்படும் என்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உறுதிமொழி வழங் கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நாட்டில் மீண்டுமொரு பிரிவினையை உண்டுபண்ணும் செயற் பாடாக அமைந்திருப்பதாக முசம்மில் குற்றஞ்சாட்டினார்.
அதேநேரம், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடன் புதிய அரசாங்கம் முரண்பாடுகளைத் தோற்றுவித்துக்கொண்டு இலங்கை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானமொன்றை நிறைவேற்றும் சர்வதேச முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.
நல்லாட்சி எனக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வடமாகாண ஆளுநரை மாற்றியுள்ளது, இராணுவ முகாம்களை அகற்றி வருகிறது, இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு படிப்படியாக நாட்டைப் பிரிக்கும் செயற்பாடுகள் நல்லாட்சியின் பெயரில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முசம்மில் மேலும் தெரிவித்தார்.
மஹிந்த மீண்டும் பிரதமராவார்
மக்களின் அபிலாஷைக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று பிரதமர் ஆவார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முசம்மில் குறிப்பிட்டார்.
மக்களை ஒருபோதும் கைவிடப்போவ தில்லையென்றும், மக்களின் அபிலா ஷைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகேகொடையில் நடைபெற்ற மக்கள் பேரணியில் வாசிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. தான் அரசியலில் இருந்து விலகவில்லையென்றும் மக்களைக் கைவிடப்போவதில்லையென்றும் கூறியிருப்பதனூடாக அவர் மீண்டும் அரசியலுக்கு வருவார் என்பது தெளிவாகிறது.
அதேநேரம், பிரதமர் வேட்பாளராக தன்னை நியமிக்குமாறு யாரிடமும் சென்று கெஞ்சவேண்டிய நிலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
(http://www.thinakaran.lk/2015/02/23/?fn=n1502236)
.jpg)