அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் சிங்கள மொழி மூல பாடசாலையாக மாற்றப்படுவதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1944 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் 1983 களின் முன் இலங்கையில் தலைசிறந்த பாடசாலைகளுள் ஒன்றாக திகழ்ந்திருந்த போதும் 1983 ஜூலை கலவரம் மற்றும் 1990களில் ஏற்பட்ட நாட்டின் பதட்ட நிலை என்பவற்றின் பின் அநுராதபுரம் நகரில் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிய பின் மாணவர் தொகை வீழ்ச்சியடைந்து பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இப்பாடசாலைக்குச் சொந்தமான காணியில் அநுராதபுரம் வலயக்கல்வி அலுவலகமும் கல்வி வள நிலையமும் அமைப்பதற்காக பாடசாலையின் சுமார் மூன்று ஏக்கர் நிலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின் இப்பாடசாலையின் கட்டிடங்களின் பகுதிகள் மற்றும் விளையாட்டு மைதானம் அதிபர் விடுதி என்பன திட்டமிட்ட அடிப்படையில் அபகரித்துக் கொள்ள ஒரு சாரார் முயற்சித்து வந்தனர். இதற்கு இப்பகுதி தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அவர்களது எண்ணம் கைவிடப்பட்டது.
தற்போது புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் இப்பாடசாலையில் சிங்கள மொழிப் பிரிவொன்றை ஆரம்பித்து படிப்படியாக சிங்களப்பாடசாலை ஒன்றாக மாற்றுவதற்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றன.
முன்மாதிரி இரு மொழிப் பாடசாலை என்ற அடிப்படையில் அ / விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலயம் வடமத்திய மாகாணத்தின் முதலாவது இரு மொழிப் பாடசாலையாக அபிவிருத்தி செய்யப்படவிருப்பதாக மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன பண்டார தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் நகரில் எட்டு சிங்கள மொழிப் பாடசாலைகள் சகல வளங்களுடன் இருக்கும் அதே வேளை இவற்றில் இரு பாடசாலைகள் முன்மாதிரி ஆரம்ப பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
எனினும் தமிழ் மொழி மூலம் இரு பாடசாலைகளே நகரில் இயங்கி வருகின்றன.
இப்பாடசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உதவிகள் எதனையும் செய்யாத நிலையில் இதனை திருமொழி மூல பாடசாலையாக மாற்ற மேற்கொள்ளப்படும் முயற்சியை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
