சாமிவேல் சுதர்ஷினி சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், விஷ வகையான மருந்துகள் மற்றும் சட்டவிரோத பொருட்களின் இறக்குமதியில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போதுள்ள தண்டனை மற்றும் தண்டப்பணம் ஆகியவற்றை இரண்டு இல்லது மும் மடங்குகளாக அதிகரிப்பதன் மூலம் சட்டவிரோத இறக்குமதிகளை மேலும் குறைக்க முடியும் என சுங்கத்திணைக்கள பணிப்பாளர் ஜகத் டி வீரவர்த்தன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள சுங்க தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்படும் போதைப்பொருள் மற்றும் ஏனைய சட்விரோத பொருட்களின் இறக்குமதியை இதனூட குறைக்க முடியும்.
சுங்கத்திணைக்களத்தின் சோதனை செயற்பாடுகளை ஸ்கேன் இயந்திரத்தின் ஊடாக முழுமையாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. சட்டவிரோமாக கொண்டுவரப்படும் பொருட்களை இதனூடாக இலகுவில் இனங்காண முடியுமெனவும் அவர் தெரிவித்தார். ஸ்கேன் முறைமையை இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாவும் கேள்விப்பத்திரத்தின் ஊடாக தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்துடன் ஓப்பந்தம் செய்யப்படவுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஆசிய வங்கியிடம் இதற்கான நிதியுதவியை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதுள்ள ஸ்கேன் இயந்திரம் 8 வருடங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் இந்த இயந்திரத்தை விற்பனை செய்வதா அல்லது ஹம்பாந்தோட்டையில் நிறுவி செயற்பாடுகளை முன்னெடுப்பதா என இன்னும் தீர்மானிக்க வில்லை என அவர் தெரிவித்தார்.
தெரிவு செய்யப்பட்ட இறக்குதிமதியாளர்கள், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் குறித்து 72 மணித்தியாளங்களுக்கு முன் அறிக்கை ஒன்றை சுங்கத்திணைக்களத்திடம் சமர்ப்பிப்பதன் மூலம் எவ்வித சோதனைகளும் இன்றி பொருட்களை வியாபார தளங்களுக்கு கொண்டு செல்ல முடியும் என அவர் தெரிவித்தார். இதற்காக கிரீன் லைன் இணையத்தளத்தின் ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
