Friday, February 20, 2015

அலரி மாளிகையினுள் ஆட்டோவில் சென்ற மாகாண சபை உறுப்பினர் நியாஸ்

புத்தளம் மாவட்ட அரச அலுவலகங்களில் நீண்ட காலமாகப் பணியாற்றும் தமிழ் மொழி அரச அதிகாரிகளின் பதவி உயர்வுகள் உட்பட அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றினை நகர அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவருமான ரவூப் ஹக்கீமின் சிபார்சுடன் அலரி மாளிகையில் கையளித்துள்ளதாக வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ் தெரிவித்தார். இன்று காலை என்றுமில்லாதவாறு தான் முச்சக்கர வண்டியொன்றில் அலரி மாளிகையினுள் சென்று இந்த மகஜரைக் கையளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களில் பணியாற்றும் அனேகமான தமிழ் மொழி அதிகாரிகள்  பல வருடங்களாக எவ்விதப் பதவி உயர்வுகளுமின்றி ஓரங்கட்டப்பட்டுள்ளனர். அத்தோடு அவ்வப்போது அவர்கள் இடமாற்றங்களும் செய்யப்பட்டுள்ளனர். எனவே இவ்வாறான அதிகாரிகளின் தகமை அடிப்படையில் அவர்களுக்குரிய பதவி உயர்வுகள் வழங்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எனது மகஜரை இன்று (நேற்று) அலரி மாளிகையில் கையளித்தேன். இந்த மகஜரை எங்களுடை தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சிபார்சு செய்துள்ளார் என வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் தெரிவித்தார்.

இந்நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சியில் அலரி மாளிகை போன்ற முக்கிய இடம் ஒன்றினுள் முன்னரைப் போன்ற கடும் பாதுகாப்புக்கள் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி முச்சக்கர வண்டியொன்றில் சென்றது தனக்கு புது அனுபவமாக இருந்தது என்றும் புதிய ஆட்சியில் பெற்ற மாற்றம் இதுவாகும் எனவும் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் தெரிவித்தார்.

Disqus Comments