எமது இயக்கம் தேர்தல் காலங்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டது. ஐக்கிய தேசியக்கட்சி உட்பட பல கட்சிகள் இந்த உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டன. குறிப்பாக மூன்று விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு நாம் வேண்டுகோள் விடுத்தோம்.
தற்போது காணப்படும் நிறைவேற்று அதிகார முடைய ஜனாதிபதி முறையை மாற்றியமைத்தல், தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தல், 18ஆவது திருத்தச் சட்டமூலத்தை நீக்கி 17ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வலுப்படுத்தல் போன்றன அதில் பிரதான விடயங்களாக கூறப்பட்டன. அந்த வகையில் தற்போது ஒரு மாதமும் 15 நாட்களும் கழிந்துள்ள நிலையில் புதிய அரசாங்கத்தினால் மேற்கூறிய விடயங்கள் தொடர்பில் சரியான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக எமக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார் சோபித்த தேரர்.
பொது வேட்பாளர் திட்டத்தை முன்வைத்து கடுமையாக உழைத்த அவர் மேலும் தெரிவிக்கையில், நாமும் இந்த அரசாங்கத்தின் பிரதான பங்காளிகள் என்ற வகையில் இது தொடர்பாக அரசாங்கத்துக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டியுள்ளது. எமது அமைப்பு அரசியல் கட்சியாக இல்லாத போதிலும் பொதுமக்களோடு அந்நியோன்யமாக செயற்படும் அமைப்பாக இருப்பதால் மக்களுக்கு தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமையாகும்.
100 நாட்களின் பின்னர் அரசாங்கம் பொதுத் தேர்தலுக்கு செல்லுமாயின் தேர்தல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
தற்போது காணப்படும் விகிதாசாரத் தேர்தல் காரணமாக ஊழல், மோசடிகள் தொடர்ந்து இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தனவந்தர்கள் தனக்கு வேண்டியவர்களை அரசியலுக்கு கொண்டு வந்து வெற்றி பெற்றவுடன் அவர்களின் தேவைக்கு ஏற்ப செயற்படுகின்றனர். எனவே, நாம் இந்த தேர்தல் முறையை மாற்றியமைக்க வேண்டு மென்று கோரிக்கை விடுக் கிறோம். புதிய அரசாங்கம் தேர்தல் முறையை மாற்றியமைக்கும் வரை அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தங்களை கொடுப்போம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
