நேற்றைய தினம் நுகேகொட நகரில் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிபீடம் ஏற்றுவதற்கான ஆதரவுக் கூட்டத்திற்கு ஐந்து லட்சம் பேர் வந்திருந்ததாக தகவல் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் ஏற்பாட்டளர்களில் ஒருவருமான விமல் வீரவன்ச. முடிந்தால் ஐயாயிரம் பேரைக் கொண்டுவரும் படி கோரிய அசாத் சாலி, எப்போது அரசியலை விட்டு விலகப் போகிறார் என கேள்வியெழுப்பியுள்ளார்.
எனினும், தான் அவ்வாறு கூறவில்லையெனவும் விமல் வீரவன்சவால் தனிப்பட்ட ரீதியாக 5000 பேரைக் கொண்டு வர முடியுமா எனவே கேள்வியெழுப்பியதாகவும் அவ்வாறு நிகழ்ந்தால் அரசியலை விட்டு ஒதுங்குவேன் எனவுமே தான் தெரிவித்திருந்ததாகவும் வந்தவர்கள் விமலுக்காக வரவில்லையெனவும் முன்னதாக மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்திருந்தார்.
எனினும், இப்பேற்பட்ட பாரிய கூட்டம் கூடியமையானது அசாத் சாலி போன்ற இனவாத அரசியல் வாதிகளுக்கு மக்கள் வழங்கிய சாட்டையடியென விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளதோடு இவர் போன்ற இனவாத அரசியல்வாதிகள் புறக்கணிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஆயினும் கூட்டத்திற்கு வந்திருந்த சனத்திரளில் 5000 பேர் கூட விமல் வீரவன்சவுக்காக வரவில்லை என்பதே அசாத் சாலியின் கருத்தாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
