வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் புதுடில்லியிலுள்ள ஹைதராபாத் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது, இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன் ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன. கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 6ஆவது ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட மைத்திரிபால சிறிசேன, தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கே மேற்கொண்டார்.
புதுடெல்லியை ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அங்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இந்திய ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேற்றுக்காலை 10 மணிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பகல் 12 மணியளவில் பிரதமர் மோடியை ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை இடம்பெற்றது.
இருவருக்கும் இடையிலான சந்திப்பில் இருநாட்டு உறவுகள், தொழில் வர்த்தக உடன்பாடு, குறிப்பாக தமிழக மீனவர்கள் பிரச்சினைகள், இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை திருப்பி அனுப்புவது, நீண்ட காலமாக நீடித்து வரும் தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணுதல், இலங்கையில் போருக்குப் பின் தமிழர் பகுதியில் இந்தியா உதவியுடன் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள், தமிழர்கள் மீள் குடியேற்றம், அதிக அதிகாரம் வழங்குதல் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சந்திப்பை அடுத்து இந்திய பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் இணைந்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டனர். அந்த கூட்டறிக்கையின்படி கருத்துரைத்த இந்திய பிரதமர் மோடி, 'வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலே இந்தியா - இலங்கை இடையே தொடர்பு உள்ளது. இந்த தொடர்பு மேலும் வலுப்பெறும். இரு நாடுகளினுடைய இலட்சியங்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உடையவை' என்று கூறினார். அத்துடன், 'இருநாட்டு பொருளாதார வளர்ச்சிக்குள்ள வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்த உறுதி பூண்டுள்ளதாகவும்' மோடி கூறினார்.
'இரு நாடுகளுக்கிடையே அணுசக்தி துறையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். அத்துடன் இலங்கையில் இந்தியாவின் அந்நிய முதலீடு அதிகரிக்கப்படும்' என்றும் தெரிவித்தார். இலங்கையுடன் விமானம் மற்றும் கடல் வழி தொடர்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு குறித்த விடயத்தில் இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயற்பட முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார். 'இலங்கை இந்தியாவின் மிக நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனாவும், நானும் இரு நாட்டு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை குறித்து திருப்தியான வகையில் ஆலோசனை நடத்தினோம்.
இந்திய மக்களின் அன்பும் ஒத்துழைப்பும் என்றும் இலங்கை மக்களுக்கு உண்டு. இலங்கையின் வளர்ச்சிக்கான இந்தியாவின் உதவி தொடரும்' என்று இந்திய பிரதமர் மேலும் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்றிரவு விருந்துபசாரம் அளித்தார். ஜனாதிபதி மைத்திரி இன்று 17 ஆம் திகதி காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் பீகார் மாநிலம் புத்தகயா செல்வார்.
அங்கு புத்தர் கோவிலில் வழிபாடு செய்வதுடன் அன்றிரவு திருப்பதிக்கு செல்வார். அவருக்கு ரேணி குண்டா விமான நிலையத்தில் ஆந்திர மாநில அரசு சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்து தரைவழியாக நேராக காரில் திருமலை சென்று விருந்தினர் மாளிகையில் தங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 18ஆம் திகதி அதிகாலை ஏழுமலையான் கோவிலில் சாமிதரிசனம் செய்வார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு லட்டு பிரசாதம் வழங்கப்படவிருக்கின்றது. ஏழுமலையான் தரிசனம் முடிந்ததும் தரைவழியாக ரேணிகுண்டா சென்று அங்கிருந்து விமானம் மூலம் கொச்சி வழியாக கொழும்புக்கு திரும்பவிருக்கின்றார்.
