Saturday, February 28, 2015

பெட்டிக்கடை என்ற பெயரில் யாரும் எம்மை அச்சுறுத்துவதை அனுமத்திக்க மாட்டோம் - K.A. பாயிஸ்

நகரின் பாதைகளை ஆக்கிரமித்து வியாபார நடவடிக்கைகளை மேட்கொண்டுவரும் நடை பாதை வியாபாரத்துக்கு எதிராக தொடர்ந்தும் நகர சபை போராடிவருகின்ற நிலையில், இது சம்பந்தமான சுமுகமான தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்கில், மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ பாலித ரங்கே பண்டார அவர்களின் வேண்டுகோளின் பேரில் இருதரப்பு கலந்துரையாடல் நேற்று(26.02.2015) நடைபெற்றது.

இவ்விஷேட கூட்டத்தில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஏ. சதுர்தீன், எம்.டீ.என். அமீன் மற்றும் வாசல பண்டார, பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் எம். அருள்தாஸ், புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமண சேன உட்பட வார்த்தகப் பிரமுகர்களும், பெட்டிக்கடை வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது பெட்டிக்கடை வியாபாரம் செய்யும் சுமார் 70 பேருக்கும், தபால் நிலைய சந்தியில், புதிய தினச்சந்தைக்கு முன்னாலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் இடம்தருமாறு பெட்டிக்கடைக்காரர்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.

நகர சபை சார்பில உரையாற்றிய நகர பிதா கே.ஏ. பாயிஸ்; 1997 ஆம் ஆண்டு நான் நகர பிதாவாக இருந்த போது பாதைகளை ஆக்கிரமித்திருந்த பெட்டிக்கடைகளை சீரமைத்து கொழும்பைப்போன்று ஒழுங்கான நடைமுறை ஒன்றை ஏற்படுத்தினோம். காலப்போக்கில் அப்பெட்டிக்கடைகளைப் பெரிதாக்கி பாதைகளையும், பாதை ஓரங்களையும் முழுமையாக ஆக்கிரமிகின்ற நிலை உருவாகியது. நாட்டில் வழக்கில் இருக்கின்ற நகர சபை கட்டளைச்சட்டம், வீதி அபிவிருத்தி அதிகார சபைச்சட்டம், நகர அபிவிருத்தி அதிகார சபைச்சட்டங்களை மீறும் செயலாக இது மாறியது. எனவேதான் 2011 ஆம் ஆண்டு மீண்டும் நகர சபை தலைவராக வந்த போது பொலிசார் மற்றும் ஏனைய அரச சார் நிறுவனங்களின் பாதை பாதுகாப்புக் குழு வீதி அபிவிருத்தி அதிகார சபை, வடமேல் மாகான ஆளுநர் தலைமையிலான பாதுகாப்புக்குழு பெட்டிக்கடைகளை அப்புரப்படுத்துவதட்கான உத்தரவுகளை விடுத்திருந்ததோடு, நடவடிக்கைகளையும் மேற்கொண்டன.

இந்நிலையில் சுமார் ஒன்றரை வருடம் வரை பெட்டிக்கடை வியாபாரிகளுக்கு மாற்று வழிகளை பெற்றுக்கொள்வதற்காக காலம் பெற்றுக்கொடுக்கப்பட்டது. அதன் பின்னரே அழுத்தங்களுக்கு மத்தியில் அவற்றுக்கு மாற்று இடம் வழங்கினோம். ஆனால் அவ்விடத்தில் வியாபாரத்தை சரியாக ஏற்படுத்திக் கொள்ளாமல் அதை தவறவிட்டவர்கள் பெட்டிக்கடை காரர்களே. அதற்கு முதலீடு இன்மை போன்ற வேறு காரணக்களும் இருக்கலாம்.


எது எப்படி இருப்பினும் அதை விடவும் இன்னொரு பிரச்சினையும் எங்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்லே இருக்கின்ற பெரிய முதலீட்டில் சொந்தமாக கடைவைத்து வியாபாரம் செய்பவர்களின் வியாபாரத்தை நஷ்டப்படுத்தும் நிலையை இப்பெட்டிக்கடைகள் ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தி வருகின்றனர். அதை பற்றியும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டியுள்ளது.

அதேநேரம் மாறியிருக்கின்ற அரசியல் நிலைமையை சாதகமாக பயன்படுத்தி என்னை யாரும் பலவந்தப்படுத்தவும் அனுமதியளிக்க முடியாது. பெட்டிக்கடைகளின் பேரில் வெளி இடங்களில் இருந்து கொண்டுவந்து குடியேற்றுவதையும் நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

எது எப்படி இருப்பினும் பெட்டிக்கடை காரர்களின் இழப்பு நகர சபைக்கு பாரிய நஷ்டத்தை கொண்டுவந்திருக்கிறது. பெட்டிக்கடை காரர்களின் வறுமை நிலையை கருத்தில் கொண்டு சுமுகமான நிலையை ஏற்படுத்திக்கொள்ள நகர சபை தயாராக இருக்கிறது.
இறுதியில் தற்சமையம் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்ற 30 பேருக்கு புதிதாக அமைக்கப்பட்டு வருகின்ற மீன் சந்தைக்கு அருகில் ஞாயிறு சந்தைக் கட்டிடத்தில் இடம் ஒதுக்கிக் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.




Disqus Comments