Tuesday, March 3, 2015

பிற கட்சிக்கூட்டங்களில் ஶ்ரீ.சு. கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளக் கூடாது – மத்திய செயற்குழு

வேறு கட்சிகள் ஏற்பாடு செய்யும் அரசியல் கூட்டங்களில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் அனுமதியின்றி கலந்துகொள்ளக்கூடாதென அந்தக் கட்சியின் மத்திய செயற்குழு அறிவித்துள்ளது.
கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் தான்தோன்றித் தனமாக செயற்படுதல் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்தல் போன்றவற்றைத் தடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடியதன் பின்னர், அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களை அறிவிக்கும் வகையில் பிரதான செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தெரிவுசெய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் சபையின் கீழ், கட்சியின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதே கட்சியின் இலக்கு என அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
சில பிற்போக்கு சக்திகள் இந்த நடவடிக்கையை பலவீனமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளமையை காணக்கூடியதாக உள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலைமையினை புரிந்துகொண்டு, பிற்போக்கு சக்திகள் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு இடமளிக்காது, அனைத்து தரப்பினருடனும் இணைந்து நடவடிக்கை எடுப்பது கட்சியினரின் பொறுப்பு எனவும் அனுர பிரியதர்ஷன யாப்பா மேலும் தெரிவித்துள்ளார்.
Disqus Comments