Thursday, March 12, 2015

நேர்முக பரீட்சைக்கு சென்ற இரத்னபுரி முஸ்லிம் அபேட்சகர்களுக்கு கடுந் தொனியில் ஏச்சு.!

இக்பால் அலி | மலையக தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்களுக்கான நேர்முக பரீட்சைக்கு சென்ற இரத்னபுரி முஸ்லிம் அபேட்சகர்களுக்கு கடுந் தொனியில் ஏச்சு.! இந் நியமனங்கள் பெருந்தோட்ட தமிழர்களுக்குரியது. ! என்று வலியுறுத்தல்.


கடந்த அரசாங்கத்தின் கல்வியமைச்சின் 2014/08/08 ந் திகதி இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தலில் மலையக பிரேதேச பதினொரு மாவட்டங்களிலுள்ள அனைத்து கல்வி வலயங்களிளுமுள்ள தமிழ் பாடசாலைகளில் கற்பிப்பதற்காக நான்காயிரத்தி ஐநூறு ஆசிரிய வெற்றிடங்களுக்கான வின்னப்பங்கோரப் பட்டுள்ளது. இதில் முஸ்லிம் பாடசாலைகள் முற்றாக புறக்கணிக்கப் பட்டுள்ளன. குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய உரிய ஆசிரிய நியமனங்களை மலையகத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு மாத்திரம் வழங்கு வதற்கான ஏற்பாடுகளை தற்போதைய கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

அதற்கமைய கடந்த 2015/03/09,10,11 ஆகிய தினங்களில் மலையகத்தில் பல்வேறு இடங்களில்  நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ௦9ந் திகதி இரத்னபுரி ர / பர்குசன் மகளிர் உயர் கல்லூரியில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்குச் சென்ற முஸ்லிம் அபேட்சகர்களே மேற்படி நேர்முக பரீட்சை சபையால் (board of interview) கடுந் தொனியில் எச்சரிக்கப் பட்டுள்ளார்கள் “இந்நியமனங்கள் பெருந்தோட்ட தமிழர்களுக்குரியது. ! நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள் என்று நேர்முக பரீட்சை சபையால் (board of interview) எச்சரிக்கப் பட்டு, அடுத்த நாள் (2015/03/10,11) நேர்முகப் பரீட்சைக்கு வர வேண்டிய சில முஸ்லிம் அபேட்சகர்களின் தஸ்தாவேஜுக்கள் அடங்கிய கோப்புகளையும் வாங்கி எடுத்துள்ளனர்.

 இவ் அரச வர்த்தமானி சந்பந்தமாக பூரண அறிவை தற்போதைய கல்வி அமைச்சர் அறிந்திருக்க நியாயமில்லை. “தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கான ஆசிரிய நியமனங்கள்” எனும்போது இதில் முஸ்லிம் பாடசாலைகள் புறக்கணிக்கப் பட்டிருப்பதை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பிட்ட 2014/08/08 ந் திகதி அறிவிக்கப் பட்ட வர்த்தமானியில் ஒரு முஸ்லிம் பாடசாலையேனும் உள்வாங்கப் படவில்லை. அதேவேளை விண்ணப்பித்த முஸ்லிம் அபேட்சகர்களுக்கும் நேமுகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதம் வந்துள்ளது.


ஆனால் அக்கடிதத்தில் “பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்ட ஆசிரியர் நியமனங்களுக்கான நேர்முகப் பரீட்சை” என்றே தலைப்பிடப் பட்டுள்ளது.  அதாவது எந்த ஒரு முஸ்லிம் பாடசாலையும் வர்த்தமானி அறிவித்தல் மூலமாக அறிவிக்கப்படாததால் குறிப்பிட்ட தமிழ் பாடசாலைகளில் “  இஸ்லாம்” பாடத்திற்கான வெற்றிடங்கள் இருந்தால் ஒழிய ஏனைய பாடங்களுக்காக முஸ்லிம் அபேட்சகர்கள் தெரிவு செய்யப் படமாட்டார்கள் என்பதே நாம் விளங்க வேண்டிய விடயமாகும். இதுவிடயமாக மலையக முஸ்லிம் கவுன்சில் (UCMC) தலைவர ஏ.எம்.எம் முஸம்மில் கருத்து தெரிவிக்கையில்,

 “இந்த வர்த்தமானி அறிவித்தல் இன ரீதியிலான ஒதுக்கு முறைக்கு நேரடியாக வழிகோலுகிறது. கடந்த 2௦௦5 ம் ஆண்டு வழங்கப் பட்ட தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்களில் முஸ்லிம் அபேட்சகர்களை முற்றாக புறக்கணிப்பதற்காக, குறித்த ஆசிரிய நியமனகளுக்காக அடிப்படைத் தகைமையாக க பொ த (சா/த) பரீட்சையில் இந்து அல்லது ரோமன் கத்தோலிக்க பாடங்களில் திறமை சித்தியை கட்டாய படுத்தப்பட்டிருந்தது. இது இன ரீதியிலான பாகுபாட்டை ஏற்படுத்துகின்றது என்பதை சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டு, பிறகு மலையக முஸ்லிம் பாடசாலைகளின் வெற்றிடங்களுக்கமைய முஸ்லிம்களுக்கும் அறுநூறு நியமனகள் வழங்குவதாக ஏற்றுக்கொள்ளப் பட்டு குறிப்பிட்ட வழக்கு தீர்த்து வைக்கப் பட்டது.

 மீண்டும் அதேபாணியில் வேறொரு யுக்தியை கையாண்டு இந்த வர்த்தமானி அறிவித்தலினூடாக இன ஒதுக்குமுறைக்கும் பாகுபாட்டிற்கும் வழிசமைக்கப் பட்டுள்ளது. மலையகத்தில் ஒரே மொழியை பேசி ஒற்றுமையுடன் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய அரசியல் இலாபத்தை நோக்காகக் கொண்ட செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம்.

 இந் நாட்டு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் ஒரே கல்வி அமைச்சினூடாக நிர்வகிக்கப்படுகின்ற பாடசாலைகளை இருவேறு விதமாக நோக்குவது கண்டனத்திற்குரியது. குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலில் “ பெருந்தோட்டத் துறை தமிழ் பாடசாலைகள் என்று குறிப்பிடப் பட்டு நகர்புற தமிழ் பாடசாலைகளும் உள்வாங்கப் பட்டுள்ளன. அப்படியாயின் முஸ்லிம் பாடசாலைகளை இவர்கள் எவ்வாறு ஒதுக்கமுடியும். இது முஸ்லிம் பாடசாலைகளை ஒதுக்குவது மூலம் முஸ்லிம் அபேட்சகர்களை ஒதுக்குவதற்கு மேற்கொள்ளப் பட்டுள்ள உபாயமாகும். ஒன்றில் குறிப்பிட்டளவு முஸ்லிம் நியமனங்கள் முஸ்லிம்களுக்காக வழங்கப் பட வேண்டும். அல்லது அனைத்து தமிழ் மொழி மூல பாடசாலைகளினதும் (தமிழ் முஸ்லிம் வேறுபாடின்றி) ஆசிரிய வெற்றிடங்கள் தீர்க்கப் படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 ஆகவே இந்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக திருத்தியமைக்கப் பட்டு ஒரு பொது நியதியின் அடிப்படையில் முஸ்லிம் பாடசாலைகளும் உள்ளடங்கலாக மீண்டும் அறிவிக்கப் படவேண்டும். அல்லாவிடின் கடந்த கால அனுபவங்களின் அடிப்படியில் இதற்கான நீதியை நாடி செயற் படவேண்டி வரும்.

 தேசிய அரசியல் தலைமைகள் இது விடயத்தில் வாக்குகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு செயற்படாது கலிமாச் சொன்னதொரு சகோதர சமூகம் பாதிக்கப் படும் போது நீதியை பெற்றுத் தர முன்வர வேண்டும் . அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இவ்விடயத்தில் பாரிய பொறுப்புள்ளது.

அதேவேளை இலங்கை கல்வி அமைச்சின் செயலில் உள்ள முஸ்லிம் பிரிவின் கல்வி அதிகாரிகள் மலையக முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்கள் பற்றிய தகவல்களை துல்லியமாக  திரட்டி அவற்றை பகிரங்கப் படுத்த வேண்டும். இதுபோன்ற ஒதுக்கு முறைகளுக்கு ஆளாவதட்கு
இந்த முஸ்லிம் கல்விப் பிரிவின் உதாசீனப் போக்கும் காரணம் என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.” என்றும் தெரிவித்தார்.


இது விடயமாக தற்போதைக்கு அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளோம். அத்துடன் ஸ்ரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் மற்றும் சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் ஆகியோருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்திவருவதுடன் சட்ட நடவடிக்கைகளுக்கு தேவையான முன் ஆயத்தங்களை செய்து வருகின்றோம் . மேலும் ஊவா மாகாண முஸ்லிம் பாடசாலைகள் , பள்ளி வாயில்களுடன் கூடிய அஹதியா பாடசாலைகள் , தொண்டு நிறுவனங்களுக்கு அறிவித்து , தகுந்த விண்ணப்ப தாரிகளை ஒன்று திரட்டி குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதியை பெற்று முஸ்லிம் பாடசாலைகளின் வெற்றிடங்களையும் நிரப்புவதற்காக உரிய நடவடிக்கைகளை மலையக முஸ்லிம் கவுன்சில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
நன்றி - ஸ்ரீலங்காமுஸ்லிம்.எல்கே.
Disqus Comments